அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது. அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீத ஆதரவு கூட ஓ.பி.எஸ்.ஸுக்கு கிடையாது. எனவே, ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பை தடுத்து நிறுத்தக்கூடாது என வாதங்களை எடப்பாடி தரப்பு வைத்து வருகிறது.

கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ் மற்றும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், தனது அனுமதி இல்லாமல் கூடிய இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றத்திற்குச் சென்றது. இந்த விவகாரத்தில் இதுவரை எடப்பாடிக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களாக அங்குப் பல அதிரடி நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் சமீபத்தில் தான் எடப்பாடி தரப்பு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் பொதுக்குழு கூட்டப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்த மனுவை இப்போது தொடர்ந்துள்ளனர் என்றும் இதனால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதேபோல வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் தாங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு ஏப்ரல் 11இல் விசாரணைக்கு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கும் அதே நேரத்தில், எடப்பாடியை அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யும் நடவடிக்கை நடந்து வந்தது. அதன்படி நேற்று முன்தினம் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார்.

இன்று மாலை வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் நிலையில், வரும் மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யவுள்ளனர். அதற்கு மறுநாள் முடிவுகள் அறிவிக்கப்படும். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த தேர்தல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. முதல் நாளான நேற்றே எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து மற்றவர்கள் போட்டியிட வாய்ப்புகள் குறைவு என்பதால் அவர் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்பு உள்ளது.

எடப்பாடி தரப்பின் இந்த திடீர் முடிவால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியது. மேலும், தேர்தல் ஆணையத்திடமும் முறையிட உள்ளனர். இதனிடையே நேற்றைய தினம் சென்னை ஐகோர்டில் மனோஜ் பாண்டியன் முறையீடு செய்தார். இரட்டைத் தலைமையை ஒழித்து ஒற்றைத் தலைமையை உருவாக்கிக் கொண்டுவரப்பட்ட, தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவசர முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, இதை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். அதன்படி, இந்த மனுவை விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை நீதிபதி கே.குமரேஷ் பாபு இன்று விசாரிக்கிறார். இந்த வழக்கு விசாரணை இப்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தரப்பு வழக்கறிஞர், ‘‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வகித்த பதவிகளை யாரும் வகிக்க முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடந்தால், இன்று மாலையே எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வாகி விடுவார். எனவே, பொதுச்செயலாளர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை… என அடுத்தடுத்த வாதங்களை அடுக்கி வருகின்றனர்’’ என வாதாடி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் சீனியர் வழக்கறிஞர்களான சி.எஸ்.வைத்தியநாதன், விஜய் நாராயண் வைத்த வாதத்தில், எடுத்த எடுப்பிலேயே, ‘அ.தி.மு.க.வில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு சதவீத உறுப்பினர்களின் ஆதரவு கூட ஓ.பன்னீர் செல்வத்திற்கு கிடையாது. நான்கு பேரை வைத்துக்கொண்டு, ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பை தடுப்பது, அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தினுடைய இயக்கத்தை தடுப்பதாகும்’’ என அடுக்கடுக்கான வாதங்களை வைத்து வருகின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal