முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உதயநிதியிடம் அவரது ஆதரவாளர்கள் வைத்த கோரிக்கை தமிழக அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார். வயது மூப்பின் காரணமாக உயிர் இழந்த அவரின் சாம்பலை ஓ.பன்னீர் செல்வம் கங்கையில் கரைக்க சமீபத்தில் சென்றார். தாய் இறந்ததை தொடர்ந்து அவர் கட்சி பணிகளை தவிர்த்து வீட்டில் இருந்து வந்தார். பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசி மூலமும் விசாரித்தனர். இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12.30 மணி அளவில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தாயார் மறைவு குறித்து விசாரித்தார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த முதலமைச்சரை மூத்த நிர்வாகிகள் அழைத்து சென்றனர்.
ஓ.பன்னீர் செல்வத்திடம் மு.க.ஸ்டாலின் துக்கம் விசாரித்தார். 10 நிமிடங்கள் அவர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்று இருந்தார். வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்ட போது அவரை வாசல் வரை வந்து ஓ.பன்னீர் செல்வம் வழியனுப்பி வைத்தார்.
இதற்கிடையே ஓ.பி.எஸ்.ஸை சந்தித்துவிட்டு உதயநிதி காரில் ஏறி கிளம்பும் போது, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அவரை முற்றுகையிட்டு, ‘கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை விரைவில் கைது செய்யுங்கள்’’ என்று சூழந்து கொண்டு கோரிக்கை வைத்தனர். உதயநிதியும் ‘சரி’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்!
இது பற்றி எடப்பாடி ஆதரவாளர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வின் ‘பி’ டீம் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இப்போது பார்த்தீர்களா… முட்டிக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, கொடநாடு வழக்கிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முடிச்சுப் போட முயற்சிக்கிறார்கள்.
கொடநாடு வழக்கிற்கும் எடப்பாடியாருக்கும் எந்த சம்பந்தமம் இல்லை. அவர் ஆட்சியில் இருக்கும்போதுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது, அரசியல் ஆதாயத்திற்காக தி.மு.க. ஏதாவது செய்தால், கண்டிப்பாக பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரிக்கை தொனியில் பேசினர்!