‘படுக்கையறை மற்றும் பாத்ரூமைத் தவிர அனைத்து இடங்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காரணம், மூன்றாவது கண்ணாக மொபைல் போன் இருக்கிறது’ என கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார். தற்போது, யூடியூபில் ‘உண்மையை உரக்கச் சொல்லும் உடகவியலாளர்கள்’ என்று சொல்லிக்கொள்பவர்களின் ‘முகத்திரை கிழிந்த’ வீடியோ வெளியாக தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவால், பி.ஜே.பி. பிரமுகர் ஒருவருக்கு அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டது. காரணம், ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோ வெளியானதால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவர், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, மிகவும் வலிமையான கருத்துக்களை பா.ஜ.க.விற்காக எடுத்து வைப்பவர்.

இவரது வீடியோவை அவரது கட்சியிலிருந்த ஒரு யூடியூப் பிரபலம்தான் வெளிட்டார். ‘மலை’யை நம்பி வெளியிட்டு, அவர் கைகொடுக்காததால், சில ஆண்டுகள் வனவாசம் போயிருந்த அந்த பிரபலம், தற்போது ‘ஸ்ட்ரிங் ஆபரேசன்’ என்ற பெயரில், தி.மு.க.விற்கு எதிராக கருத்துக் கூறுபவர்கள் மற்றும் ‘நாங்கள்தான் அதிபுத்திசாலிகள்’ என்று கூறிக்கொண்டு யுடியூப் மூலம் தமிழக அரசியல் களத்தையே தலைகீழாக மாற்றுவோம் என்று சொல்லிக்கொள்பவர்களை சிக்க வைத்திருக்கிறார். அதாவது தங்களுடைய பேச்சுக்காக பேரம் பேசுவது, சரக்கு அடிப்பது, பணம் வாங்குவது, அடுத்து யாரை அரியனையில் அமர்த்துவது, யாரை வீழ்த்துவது என இவர்கள் நினைத்தால் முடித்துவிடுவார்களாம். இப்படி பேசிக் கொள்ளும் வீடியோதான் வெளியாகியிருக்கிறது. (அதுவும் திருச்சியில் தி.மு.க.வினர் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்கிய நாளன்று வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது)

இப்படி இவர்கள் பேசிக்கொள்ளும் வீடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இது போன்ற வீடியோக்கள் தொடர்ந்து வெளிவரும் என்றும் அந்த பிரபலம் சொல்லியிருக்கிறார். ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசிவரும் பிரபலம், அந்த ஸ்டார் ஓட்டல் பாரில், தனக்கு பரிசளித்த தங்க மோதிரத்தை அடிக்கடி திறந்து பார்த்துக்கொண்டிருப்பார். இவர்தான், ஓ-பிஎஸ்ஸை அ.தி.மு.க.வில் தூக்கி நிறுத்துவேன் என்று சவால் விட்டு பேசிக்கொண்டிருப்பவர்.

இதற்கிடையே, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றியும், அவர்களுடனேயே பயணித்த மாதிரியும், சிலர் யூடியூப் சேனல்களில் சம்மந்தமே இல்லாமல் பேசி வருவதையும், அறியாமையில் இருக்கும் மக்கள் இதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி அதிகம் பேர் பார்ப்பதால் யுடியூப் சேனல்களுக்கும், பேசுபவர்களுக்கும் ஒரு மறைமுக பலன் கிடைக்கும். இப்படி மறைமுக பலன் கிடைப்பதோடு, சில பேரங்களும் நடக்கிறது என்பதைத்தான், சில தினங்களுக்கு முன்பு வெளியான வீடியோ வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. (உண்மையான விஷயத்தையும், மக்கள் நலன் சார்ந்த எத்தனையோ யுடியூப் சேனல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது)

சரி, இந்த யூடியூப் பிரபலங்களின் சிக்கிய பின்னணி விஷயத்திற்கு வருவோம்…

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனுமதியின்றி இயங்கக்கூடியதுதான் யுடியூப் சேனல்கள். இவர்களுக்கென்று நெறிமுறைகள் கிடையாது. கட்டுப்பாடுகளும் கிடையாது. எனவே, தான்தோன்றித் தனமாக எதைவேண்டுமானாலும் இவர்கள் பேசலாம். இப்படி ‘எதையாவது’ ஆதாரமின்றி பேசும் போதுதான், ஏரானமானவர்கள் பின்தொடர்கிறார்கள். இது பிஸினஸ் ரீதியாகவும், தனிநபரையும் பிரபலம் அடையச் செய்கிறது.

இதில் தங்களுக்கென ஒரு தனி வட்டாரத்தை ஏற்படுத்தி, ஒருவரையொருவர் குறை சொல்வது, புகழ்ந்து பேசுவதுதான் இவர்களது வாடிக்கை. இதையும் சகிக்காமல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (என்ன செய்ய அடுத்தவர்களைப் பற்றி ஒருவர் குறை சொல்லும்போது, வாயில் கொசுப் போவது தெரியாமல் ரசித்துப் பார்ப்பதுதானே தமிழர்களின் தலையாய கடமை). இப்படி, யுடியூப் நடத்துபவர்களுக்குள்ளேயே சமீபகாலமாக பாலிடிக்ஸ் ஆரம்பித்துவிட்டது.

அதாவது, தி.மு.க.வுக்கென்று சில யுடியூப் சேன்லகள், அ.தி.மு.க.வுக்கென்று சில யுடியூபர்கள், இருவர்களிடமுமே கல்லா கட்டும் யுடியூபர்களுமே இருக்கிறார்கள். ஒரு சிலர் தாங்கள்தான் அதிபுத்திசாலிகள் என்று யுடியூப் மூலம் அரசியல் புள்ளிகளிடம் பணம் கறக்கவும் செய்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தி.மு.க..விற்கு எதிராக பேசுபவர்களை பொறிவைத்து பிடித்திருக்கிறார் இன்னொரு யுடியூப் பிரபலம். அந்தப் பொறியில் சிக்கிக்கொண்டு, குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை, என்று இப்போது வீடியோவில் சிக்கியவர்கள் தங்களைத் தாங்களே தேற்றிகொண்டு வருகிறார்கள். இவர்களை சிக்க வைக்க கடந்த 10 மாதத்திற்கு மேலாகவே, ஆளும் புள்ளி கொடுத்த அசைன்மென்டை, போட்டுக்கொடுத்த யூடியூப் பிரபலம் குறி வைத்துப் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்திற்காக விட்டமின்களை இறக்கியது, கொங்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு ‘செயல்வீரர்’ என்கிறார்கள். இந்த விஷயங்களை எல்லாம் அறியாமல்தான், தற்போது யுடியூப் பிரபலங்கள் சிக்கிகொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள். இனியாவது, மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லவேண்டும் யுடியூபர்கள் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்!

ஒருபுறம் அரசியல்வாதிகள்தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், மறுபுறம், ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக்கொண்டு யூடியூப் மூலம் பேசிப் பேசியே மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது… இனி வருங்காலங்களில் மக்கள் தான் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal