மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தன்னுடை டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கான ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு, பாடகி சின்மியி கவிதை நடையில் பதிலடி கொடுத்திருப்பதுதான் சினிமா உலகைத் தாண்டி, தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாடலாசிரியர் வைரமுத்து மகளிர் தினத்தன்று தன்னுடைய வலைதள பக்கத்தில் பெண்களின் அருமையை குறித்து கவிதை நடையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை குறித்து கேலி செய்யும் வகையில் சின்மயி போட்ட பதிவு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர்தான் சின்மயி. இவர் ஏ ஆர் ரகுமானின் இசையில் கன்னத்தில் முத்தமிட்டாய் படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே…’ என்ற பாடலின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவருடைய குரல் பலருடைய மனக்கவலையை மறக்க வைக்கும் வகையில் இதமாக வருடும் வகையில் இருக்கிறது என்று பலரும் இவரை பாராட்டி வருகின்றனர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தார். அது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. சின்மயி மற்றும் வைரமுத்துவிற்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக சின்மயிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் இது மீடு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள்.

அது மட்டுமல்லாமல் அதைத்தொடர்ந்து வைரமுத்து யாருடைய படங்களில் ஒப்பந்தமானாலும் ஏன் இந்த மாதிரி ஆளுக்கு எல்லாம் வாய்ப்பு தருகிறீர்கள். இவரை எல்லாம் படத்தில் வைக்காதீர்கள் என்று சின்மயி அடிக்கடி விமர்சித்து ட்வீட் போட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் நடிகைகள் யாரேனும் வைரமுத்துவை சந்தித்தால் அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகிறார். அது மட்டும் அல்லாமல் இந்த பிரச்சினைக்கு பிறகு சின்மயி பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். பெண் அடிமைத்தனம் பெண்கள் சுதந்திரம் போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து வருகிறார்.

வருடங்கள் பல ஆனாலும் வைரமுத்து பற்றி சமூக வலைதளத்தில் தொடர்ந்து சின்மயி விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில்தான் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு பாடல் ஆசிரியர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றே போட்டு இருந்தார். அதில் ‘மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தால் கேட்கிறாள், வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள், ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள், கொடுத்துப் பாருங்கள் அவளே பாதுகாப்பாள் ஆண்களையும்….’ உலக மகளிர் தின வாழ்த்து என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு பதில் சொல்லும் வகையில் வைரமுத்துவின் பதிவை விமர்சித்து சின்மயி, ‘அவ்வீட்டு வாசலை தாண்டும் போது காம வெறியர்களை கேட்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்கிறாள், பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும் போது அவதூறு கேட்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள், பெண் விடுதலை மற்றும் பாதுகாப்பு பற்றி எல்லாம் இவர் பேசுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த பதிவுதான் திரையுலகத்தைத் தாண்டி, அரசியல் களத்தில் அனலடித்துக்கொண்டிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal