கர்நாடாகா மாநிலத்தின் சூப்பர் ஸ்டாராக இருந்து மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ் மனைவியும் மாண்டியா எம்பியுமான சுமலதா பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் சேர இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது

கர்நாடகா மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருக்கிறது. இதற்காக, அந்த மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் வரும் மார்ச் 12 ஆம் தேதி பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் மாண்டியா வருகிறார். பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை திறந்து வைக்கிறார்.

இவர் முன்னிலையில் நடிகையாக இருந்து அரசியல்வாதியான மாண்டியா எம்பியாக இருக்கும் சுமலதா பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிபடுத்தும் வகையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்து இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணாவை பெங்களூருவில் இருக்கும் அவரது இல்லத்தில் சுமலதா சந்தித்து இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஹிந்தவாலு சச்சிதானந்தா பாஜகவில் இணைந்து ஸ்ரீரங்கப்பட்ணாவில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டு இருக்கிறார். இதையடுத்தே சுமலதாவும் பாஜகவில் சேருவதற்கு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும், பாஜகவில் இணைந்து விடுமாறு இவருக்கு அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை வழங்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தேர்தலின்போது, மாண்டியாவில் சுமலதா போட்டியிட்டபோது இவருக்கு காங்கிரஸ் மறைமுக ஆதரவு அளித்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹெச்டி குமாராசாமியின் மகன் நிகில் போட்டியிட்டு இருந்தார். இந்த தேர்தலில் நிகிலை விட 1,25,876 வாக்குகள் கூடுதலாக பெற்று சுமலதா வெற்றி பெற்று இருந்தார்.

2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் பாஜக மொத்தமிருக்கும் 28 இடங்களில் 25 இடங்களை கைப்பற்றி இருந்தாலும், மாண்டியா மாவட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை. இன்றும் இங்கு பாஜகவுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் இல்லை. மாண்டியா மாவட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வலுவாக இருக்கிறது. இந்தக் கட்சியை எதிர்கொள்ள சுமலதாவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று பாஜகவும் முயற்சித்து வருகிறது. முன்பு, இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர்தான் அம்பரீஷ்.

அவரது மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் சுமலதாவுக்கு சீட் வழங்க முடியவில்லை என்று காங்கிரஸ் கைவிரித்துவிட்டது. இதையடுத்து அவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்வானதில் இருந்து கர்நாடகா அரசியலில் முக்கியப் புள்ளியாக சுமலதா திகழ்ந்து வருகிறார்.

மாண்டியா மாவட்டத்தில் இருக்கும் ஒக்கலிகா சமுதாயத்தினர் வாக்குகளை பெறுவதற்கு பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே பெரிய போட்டியே நடந்து வருகிறது. ஒக்கலிகா சமுதாயத்தினர் பொதுவாக முன்னாள் பிரதமர் தேவ கவுடாவுக்கு எப்போதும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் கணக்கைப் பொருத்து மாண்டியா மாவட்டத்தில் வெற்றி தோல்வி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடத்த சட்டசபை தேர்தலில் மாண்டியா மாவட்டத்தில் அனைத்து ஏழு சட்டசபை தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்று இருந்தது. இங்கு காங்கிரஸ் கட்சியும் வலுவாக இருக்கிறது, ஆனால் பாஜக வலுவிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை சரிகட்டவே சுமலதாவை எப்படியாவது பாஜகவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று முயற்சிகள் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.

அதே, சமயம் பி.ஜே.பி.யை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தைப் போலவே குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப் போவதாக இப்போதே கூறி வருவதுதான் கார்நாடக அரசியலில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal