அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. 43,923 வாக்குகள் தான் பெற்றது. ஆனாலும் டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது.

கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என்று கூறி வந்த அ.தி.மு.க.வுக்கு இந்த தேர்தல் சவாலாகவே இருந்தது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் தி.மு.க.வின் அதிரடி வியூகத்துக்கு முன்னால் எதுவும் எடுபடவில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வருகிற 9-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெறுகிறது. 85 மாவட்டக் கழக செயலாளர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பது பற்றியும் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடு பற்றியும் எடப்பாடி பழனிசாமி விரிவாக பேச உள்ளார். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சியை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும், இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளார்.

தற்போது அ.தி.மு.க.வினரிடம் பழைய உறுப்பினர் கார்டுதான் உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் கையொப்பமிட்ட புதிய உறுப்பினர் கார்டு இன்னும் வழங்கவில்லை. புதிய உறுப்பினர் கார்டு தயாராகி வருவதால் அதை அனைத்து உறுப்பினர்களுக்கும் சென்றடையும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் பணியாற்ற தேவையான ஆலோசனை வழங்கப்படும் என தெரிகிறது. 3 மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்து கட்சி தேர்தல் நடத்தவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து மூத்த நிர்வாகிகள் கூறுகையில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய உறுப்பினர் கார்டு அ.திமு.க.வினருக்கு வழங்கப்பட்டதும் இந்த பணிகள் படிப்படியாக தொடங்கும். வருகிற 17-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் வர உள்ளதால் அது பற்றியும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்படும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal