இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் பண மழையும், பரிசு மழையும் பொழிந்து விட்டது. இந்தநிலையில் ஓட்டு போட்ட பிறகும் சுடச் சுட பிரியாணி கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதுதான், மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இடைத்தேர்தல் வரலாற்றில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தலாகவே அமைந்துவிட்டது. அந்த அளவுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களை சென்றடைந்துள்ளன. காலத்தால் மறக்க முடியாத அளவுக்கு அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவர பரிசு பொருட்களை வாரி வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஓட்டு போட்ட பிறகும் வாக்காளர்களை பசியோடு அனுப்ப அரசியல் கட்சியினருக்கு மனம் வரவில்லை. எனவே ஓட்டுப்போட்டு வந்தவுடன் வாக்காளர்கள் சுடச்சுட பிரியாணி சாப்பிடலாம் என்ற அறிவிப்பை அரசியல் கட்சியினர் வெளியிட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுத்த பிறகு இறுதி கட்டமாக இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டனர்.
இதனால் வாக்காளர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓட்டுபோட்டு விட்டு வரும் வாக்காளர்களுக்கு பிரியாணி வழங்குவதற்காக அந்தந்த பகுதியில் இடவசதியை ஏற்படுத்தி உள்ளனர். ஓட்டு போட்டு விட்டு வரும் வாக்காளர்கள் ஓட்டு போட்டதற்கான அடையாளமாக கை விரலில் வைக்கப்படும் மையை காண்பித்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று சுடச்சுட பிரியாணி சாப்பிடலாம் என்று கூறி உள்ளனர்.
இதனால் ஓட்டு போட உள்ள வாக்காளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.