பொதுக்குழு வழக்கில் இன்று காலை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தநிலையில் ஓ.பி.எஸ். தனிமரமாக இருக்கிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் கிரீன்வேஸ் சாலை பக்கம் போகவில்லை. நேற்று வாங்கிய லட்டு, பட்டாசுகள் நமத்துப் போய்க்கிடக்கிறது!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட தனித்துவிடப்பட்டு இருக்கிறார். இன்று காலை ஓ பன்னீர்செல்வம் வெல்வார் என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர் இருக்கும் கிரீன்வேஸ் இல்லத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்கே வெடிகள் வாங்கி வைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் இனிப்புகள் வாங்கி வைக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள் சிலரும் அங்கே இருந்தனர். ஆனால் பெரிதாக நிர்வாகிகள் இல்லை. எடப்பாடி தரப்புடன் ஒப்பிடும் போது குறைவாகவே நிர்வாகிகள் இருந்தனர். ஆனால் இது எல்லாம் இன்று வேஸ்ட்டாகி உள்ளது. ஓ பன்னீர்செல்வத்திற்கு இந்த தீர்ப்பு பெரிய கலக்கத்தை கொடுத்துள்ளது.

தீர்ப்பு வந்த நிலையில் ஓபிஎஸ் கிரீன்வேஸ் சாலை வெறிச்சோடி கிடக்கிறது. காலை முதலே நிர்வாகிகள் அங்கு இல்லை. எடப்பாடி தரப்புதான் கட்அவுட், பாலுடன் தயாராக இருந்தது. அவர் வீட்டில் பெரிய அளவில் நிர்வாகிகள் எதிர்பார்ப்புடன் இருந்தன. இவர்கள் எல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தனர். அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் பன்னீர்செல்வம் இருக்கும் வீடு களையிழந்து காணப்படுகிறது. அவரை காண நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை.

அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் பலர் தொலைக்காட்சி விவாதங்களில் உள்ளனர். இன்னும் சிலர் வேறு வேறு ஊர்களில் உள்ளனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் வீட்டை நிர்வாகிகள் யாரும் எட்டிப்பார்க்கவில்லை. வெளியே இருந்த 10 தொண்டர்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் கிட்டத்தட்ட ஓ பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டு உள்ளார். கிட்டத்தட்ட அவர் தற்போது தனிமையில் உழன்று கொண்டு இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஓ பன்னீர்செல்வத்திற்கு அரசியல் ரீதியாக தோல்வி மேல் தோல்விதான் கிடைத்து வருகிறது.

முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வமிற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார். அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டது என்று கேள்வி எழுந்தது.

இப்படி பாஜக அதிமுக இடையே திடீரென நெருக்கம் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது தீர்ப்பும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக வந்துள்ளது. தீர்ப்பு வந்தபின் ஓ பன்னீர்செல்வம் வெளியே வராமல் அமைதியாக இருக்கிறார். பாஜகவுடன் நெருக்கமாக இருந்தும், பாஜகவிடம் மிகவும் நட்பாக இருந்தும் கூட பாஜக தரப்பு தனக்கு உரிய சப்போர்ட்டை வழங்கவில்லை, தனக்கு டெல்லி உறுதுணையாக இல்லை என்று ஓ பன்னீர்செல்வம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal