திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 11-ந்தேதி நள்ளிரவில் 4 ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை நகர பகுதியில் 2 ஏ.டி.எம். மையங்கள், போளூரில் ஒரு ஏ.டி.எம். மையம், கலசப்பாக்கத்தில் இன்னொரு ஏ.டி.எம். மையம் என 4 ஏ.டி.எம். மையங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 73 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடினார்கள். இதில் கலசப்பாக்கம் ஏ.டி.எம். மையம் “ஒன் இண்டியர்” ஏ.டி.எம். மையமாகும். மற்ற 3 ஏ.டி.எம் மையங்களும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களாகும். கடந்த 12-ந்தேதி அன்று இரவோடு இரவாக பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு தப்பிய கொள்ளையர்கள் தமிழக எல்லையை தாண்டி தலைமறைவானார்கள்.

இதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை பிடிக்க நேரடியாக களம் இறங்கினார். சென்னையில் இருந்து உடனடியாக புறப்பட்டு திருவண்ணாமலைக்கு விரைந்து சென்ற அவர் அங்கு டி.ஐ.ஜி. முத்துசாமி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசன நடத்தினார். போலீஸ் சூப்பிரண்டுகள் காரத்திகேயன் (திருவண்ணாமலை), பால கிருஷ்ணன் (திருப்பத்தூர்), ராஜேஷ்கண்ணன் (வேலூர்), செபாஸ் கல்யாண் (திருவள்ளூர்), கிரண்ஸ்ருதி (ராணிப் பேட்டை) ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தனித்தனியாக பிரிந்து கொள்ளையர்களை பிடிக்க வெவ்வேறு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டனர். இவர்களில் திருவண்ணாமலை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானா மாநிலத்துக்கு விரைந்து சென்றனர்.

ஏ.டி.எம். கொள்ளை நடந்த விதம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரீப் என்கிற கொள்ளை கும்பல் தலைவன் தலைமையில் சுமார் 6 கொள்ளையர்கள் ஏ.டி.எம்.களை குறி வைத்து கைவரிசை காட்டியது வெட்ட வெளிச்சமானது. “மேவாட்” கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் இந்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக சினிமா காட்சிகளையே மிஞ்சும் கையில் பரபரப்பாக கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுவதில் கை தேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை பற்றி ஐ.ஜி. கண்ணன் ஏற்கனவே நன்கு தெரிந்து வைத்திருந்ததால் உடனடியாக அவரது மேற்பார்வையிலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டு கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி முகமது ஆரிப் தலைமையிலான கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் முகமது ஆரிப்பும், அவனது கூட்டாளியுமான ஆசாத் ஆகிய இருவரும் அரியானாவில் பதுங்கி இருக்குமிடம் தெரிந்தது. இதைத் தொடர்ந்தது அரியானா மாநில போலீசாரின் உதவியுடன் தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டது.

ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக திருவண்ணாமலை போலீசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் ரூ.72 லட்சத்து 79 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.3 லட்சம் பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மீதமுள்ள சுமார் 70 லட்சம் ரூபாய் எங்கே? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தை கொள்ளையர்கள் பங்கு போட்டுக் கொண்டு தனித்தனியாக பிரிந்து சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் 2 பேர் மட்டுமே பிடிபட்டு உள்ள நிலையில் மற்றவர்களை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம்.களில் கை வரிசை காட்டுவதற்காக அரியானா மாநிலம் நூ மாவ்டம் சோனாரி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய கொள்ளையன் முகமது ஆரிப் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு சென்றுள்ளான். அங்கு கோலார் பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து அனைவரும் தங்கி உள்ளனர். முகமது ஆரிப்பும், கூட்டாளிகளும் திருவண்ணாமலைக்கு சென்று ஒத்திகை பார்த்துள்ளனர். இதன் பின்னரே கடந்த 12-ந்தேதி அதிகாலையில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்க்ள. இருப்பினும் போலீஸ் படை துரிதமாக செயல்பட்டு கொள்ளை கும்பலை கூண்டோடு பிடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனிப்படை போலீசாரை பாராட்டியுள்ளார் இதற்கிடையே அரியானாவில் பிடிபட்ட முகமது ஆரிப், ஆசாத் இருவரையும் போலீசார் நேற்று இரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்ற போலீசார் கொள்ளையர்கள் இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இன்று காலை திரும்பவும் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை 13 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கொள்ளை கும்பலுக்கு உதவி செய்தவர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களையும் விசாரணைக்கு வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal