ஹீரோயின்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவதில் தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என நடிகை மாளவிகா மோகனன் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இவர் நடிப்பில் தற்போது கிறிஸ்டி என்கிற மலையாள திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் படுபிசியாக உள்ள மாளவிகா பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் மலையாள ஊடகம் ஒன்றிற்கு மாளவிகா அளித்த பேட்டி ஒன்று தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

அந்த பேட்டியில் லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் குறித்து பேசி இருக்கிறார் மாளவிகா. அதன்படி ஹீரோயின்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவதில் தனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என தெரிவித்துள்ள அவர். ஹீரோக்களை எப்படி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கிறோமோ, அதேபோல் ஹீரோயின்களையும் சூப்பர்ஸ்டார் என்றே அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கத்ரீனா கைஃப், ஆலியா பட், தீபிகா படுகோன் போன்றவர்களை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பதில்லை. அவர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் தான் என்று பேசி உள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மீதுள்ள பொறாமையில் தான் மாளவிகா மோகனன் இப்படி பேசி உள்ளதாக விமர்சித்து வருகின்றனர். இதுவரை சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுவது நயன்தாரா மற்றும் மஞ்சு வாரியர் தான். ஆனால் அவர்களது பெயரை குறிப்பிடாமல் பாலிவுட் நடிகைகளின் பெயரைச் சொல்லி மாளவிகா மோகனன் பேசி உள்ளதை பார்த்த ரசிகர்கள், நயன் மீது உங்களுக்கு இன்னும் பொறாமை போகவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னதாக கடந்த ஆண்டு நடிகை மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை நயன்தாராவின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் படம் ஒன்றில் ஹாஸ்பிட்டல் சீன் ஒன்றில் மேக்கப் போட்டு நடித்ததை குறிப்பிட்டு, சாகும் நிலையில் இருக்கும்போது கூட இப்படி தான் இருப்பீர்களா என பேசி இருந்தார். இதற்கு கனெக்ட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நயன்தாராவும் பதிலடி கொடுத்தார். அது கமர்ஷியல் படம், அதில் தலையை விரித்து போட்டெல்லாம் நடிக்க முடியாது. இயக்குனரின் விருப்பத்திற்கு ஏற்ப தான் என்னால் நடிக்க முடியும் என மாளவிகா மோகனனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து இருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal