கடந்த 2016 சட்மன்றத் தேர்தலின் போது, தி.மு.க. & அ.தி.மு.க. என இரு தரப்பிலும் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் பணப்பட்டுவாடாவில் இறங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் ரத்தானது. அந்த நிலையில் ஈரோடு கிழக்குக்கு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க. கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிமுகக் கூட்டத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ‘எல்லாம் வந்து இறங்கிடுச்சு… மண்டபத்துல வச்சு கொடுத்துடுவோம்’ என்று பேசிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிச்சார்.

இந்த நிலையில்தான், சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

‘‘ஈரோட்டில் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டம் 9-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு மக்கள் அதிகமாக சென்றுவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே சட்டவிரோதமாக பந்தல் போட்டு, பிரியாணி மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏழை எளிய மக்களை கூட்டத்துக்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். திருமங்கலம் பார்முலாவை இந்த இடைத்தேர்தல் மிஞ்சிவிடும்.

ஆனால் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு 50 ஆயிரம் பேர் வந்தார்கள். எனவே தி.மு.க. எடுத்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. பண பலம், அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற தி.மு.க. முயல்கிறது. அ.தி.முக. கூட்டத்துக்கு மக்களை வர விடாமல் பணம், பிரியாணி கொடுத்து தடுக்கிறது. கூட்டணிக் கட்சி தர்மத்தின்படி த.மா.கா.விடம் கேட்டு அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

ஆனால் தி.மு.க. அங்கு ஏன் காங்கிரஸ் கட்சியை நிற்க வைத்துள்ளது? தோல்வி பயம்தான் காரணம். தைரியம் இருந்தால் தி.மு.க. அங்கு போட்டியிட்டிருக்க வேண்டும். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ.க. கட்சித் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்றாலும், அந்த கட்சியின் சார்பில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இருந்ததால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இரட்டை இலைக்கான மவுசு போய்விட்டது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதை, நன்றி கெட்டவர்களின் வாக்குமூலமாகத்தான் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இல்லை என்றாலும்கூட இரட்டை இலை வெற்றி சின்னம்தான். அதன் மவுசு குறைந்துவிட்டது, இனிமேல் வாய்ப்பு இல்லை என்று அவர் கூறுவதை, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிற நிலையாகத்தான் நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

தேர்தல் கமிஷனிடம் அளிக்கும் புகார்களுக்கு ஆதாரமாக அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக அமைப்பில் புகார் அளிப்பது, அடிப்படை உரிமை. அதை நாங்கள் தெளிவாகச் செய்து வருகிறோம். நாங்க சொல்ல வேண்டியதைச் சொல்கிறோம். செய்ய வேண்டியதை அவர்கள் செய்யட்டும். தேர்தல் கமிஷனுக்கு பிறகு கோர்ட்டு உள்ளது. இது மன்னர் ஆட்சி கிடையாது’’ இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் இறங்கினால்தான் ஜனநாயகம் காப்பாற்றடும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள். எனவே, ஈரோடு கிழக்கில் இதே நிலை நீடித்தால் தேர்தல் ரத்தானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal