முன்னாள் திருப்பரங்குன்றம் தி.மு.க. எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தன்னுடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார்.

முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் தி.மு.க.வில் மிக துடிப்புடன் பணியாற்றியவர். மதுரையில் பா.ஜ.க. வளர்ச்சி பெற்றதிலும் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த நிலையில்தான் சமீபகாலமாக மௌனமாக இருந்தவர், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறார்.

மதுரையில் ஆதரவாளர்களை அதிமுகவில் இணைக்கும் விழாவை நடத்தியுள்ள டாக்டர் சரவணன், எடப்பாடி பழனிசாமிக்கு டைமிங்காக கிஃப்ட் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார். ஆம்… 7 அடி உயரத்தில் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் சரவணன் பரிசளித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடை த்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை போராடி பெற்ற உற்சாகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இந்த செங்கோல் மேலும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான மதுரையை சேர்ந்த சரவணன் அண்மையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து தனது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைப்பதற்கான நிகழ்ச்சியை மதுரையில் இன்று நடத்தி முடித்திருக்கிறார்.

இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி திமுக அரசையும், அமைச்சர் செந்தில்பாலாஜியையும் மிக கடுமையாக விமர்சித்தார். சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்ற நிலை அதிமுகவில் மட்டுமே உள்ளதாக கூறி சரவணனையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்றார்.

டாக்டர் சரவணன் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு செக் வைக்கும் விதமாக, அவர் ஏற்பாடு செய்த இணைப்பு விழாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. டாக்டர் சரவணனும் பிரம்மாண்ட வரவேற்பை எடப்பாடிக்கு கொடுத்து அசத்தியிருக்கிறார்.

டாக்டர்இது பற்றி மதுரையில் உள்ள மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.

‘‘சார், மதுரை அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் தி.மு.க. அளவிற்கு உள்பாலிடிக்ஸ் இல்லை என்றாலும், ஓரளவு இருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மதுரையில் உள்ள மும்மூர்த்திகளின் அரசியலில் நடுநிலையாக உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் என்ன செய்வதென்று திகைத்து இருந்தனர். இந்த நிலையில்தான், துடிப்பான இளைஞரான டாக்டர் சரவணனின் வரவு… மதுரை அ.தி.மு.க.வை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை’’ என்றனர்.

ஆக, மொத்தத்தில் டாக்டர் சரவணனின் ஆபரரேசன் சக்சஸ் ஆகியிருக்கிறது என்பதுதான் உண்மை..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal