ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடப் போவதாக வேட்புமனு தாக்க செய்யப்பட்ட வேட்பாளர் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதாக, அந்த அணியில் மூத்த நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் அறிவித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு அறிவிக்கப்பட்டிருந்தார். அதிமுக சார்பாக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தன்னை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றத் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் இதற்க்கு பொதுக்குழு ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கான நடவடிக்கையை அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மேற்கொண்ட நிலையில், அவைத்தலைவர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக ஓபிஎஸ் அணி குற்றம்சாட்டியது. மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்திருத்த செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்குவார் என ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தெரிவித்துள்ளனர். இரட்டை இலை முடக்கப்பட கூடாது என்பதற்காகவும், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தாலும் செந்தில் முருகன் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்டதாக ஓபிஎஸ் அணியின் நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவோம் என தெரிவித்தவர்கள், தென்னரசுக்கு வாக்கு கேட்க மாட்டோம் இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்கு கேட்போம் என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal