ஒருபக்கம் உறவினர் மறைவு… மறுபக்கம் நெருங்கிய நண்பர் மறைவு என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று மிகவும் துயரமான நாளாக அமைந்துவிட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்றைய நாள் மிகவும் சோகமான நாளாக அமைந்துள்ளது. முதலில் இன்று அதிகாலை அவரது மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி மரணமடைந்த நிலையில், அடுத்த சில மணிநேரங்களிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்லூரி தோழனும் பிரபல திரைப்பட இயக்குனருமான டி.பி.கஜேந்திரன் காலமானார். இப்படி ஒரே நாளில் நெருங்கிய உறவினரும், உயிருக்கு உயிரான நண்பனும் உயிரிழந்தது முதல்வர் மு.க.ஸ்டாலினை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும், டிபி கஜேந்திரனும் கல்லூரி நண்பர்களாவர். இவர்கள் இருவரும் விவேகானந்தா கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். அங்கு மலர்ந்த இவர்களது நட்பு, இன்றளவும் தொடர்ந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டி.பி.கஜேந்திரனை அடிக்கடி நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்தும் விசாரித்து வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தூத்துக்குடியை சேர்ந்த இயக்குனர் டி.பி.கஜேந்திரன், சிறுவயதிலேயே சென்னையில் குடியேறி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பின்னர் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களாக விளங்கிய கே.பாலச்சந்தர், விசி, ராமநாராயணன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் சொந்தமாக படங்களை இயக்கவும் செய்தார். இவர் இயக்கிய பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா போன்ற படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை மனம்விட்டு சிரிக்க வைத்து வருகின்றன.

டி.பி.கஜேந்திரன் சென்னை சாலிகிராமத்தில் சொந்தமாக லாட்ஜ் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த லாட்ஜின் முதல் தளத்திற்கு தனது குருவான இயக்குனர் விசுவின் பெயரையும், இரண்டாம் தளத்திற்கு இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் பெயரையும், மூன்றாவது தளத்திற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா பெயரையும் சூட்டி தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்து இருப்பது தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal