உச்சநீதிமன்ற தீர்ப்பால் உண்மையில் மனம் உடைந்திருப்பது ஓ.பி.எஸ்.தான். எடப்பாடியின் ஆதரவாளர்கள் ஏக குஷியில் இருக்கிறார்கள்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை உடனே கூட்ட முடியாத பட்சத்தில் கடிதம் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இடைக்கால உத்தரவு போடப்பட்டது.

இது நேரடியாக எடப்பாடிக்கு ஆதரவான தீர்ப்பாக இல்லை என்றாலும் மறைமுகமாக அவருக்கே ஆதரவாக முடிகிறது. இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழுவில் எத்தனை வாக்குகள், ஓ பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்திலுக்கு எத்தனை பொதுக்குழுவில் வாக்குகள் என்பதுதான் இறுதியில் முக்கியத்துவம் பெரும். அதில் அதிக வாக்குகள் பெற்றவரை பொது வேட்பளாராக அறிவித்து, அதில் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடுவார். இப்போது எடப்பாடி தரப்பிற்கே பொதுக்குழுவில் ஆதரவு அதிகம் உள்ளது.

அதேபோல் தமிழ் மகன் உசேனும் எடப்பாடி ஆதரவாளர். அதனால் அவர் போடும் கையெழுத்தே இப்போது முக்கியம். பொதுக்குழு எடப்பாடி பக்கம் நின்றால் அவரின் வேட்பாளர் தேர்வாவர். இவர் பொது வேட்பாளர் என்பதால் இரட்டை இலை அவருக்கே கிடைக்கும். சின்னம் முடங்காது. கிட்டத்தட்ட எடப்பாடிக்கு இது பெரிய ஆதரவான தீர்ப்பாக மாறி உள்ளது.

இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடுமையாக அப்செட் ஆகி உள்ளதாம். நேற்று பொதுவேட்பாளரை, அதாவது இரட்டை இலை சின்னத்தின் கீழ் நிற்கும் வேட்பளாரை ஏற்றுக்கொள்வோம் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தது. இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று தெரிவித்தது. அந்த அறிக்கையை ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த அறிக்கையை கூட படிக்க கூட ஓ பன்னீர்செல்வம் நேரில் வரவில்லை. செய்தியாளர் சந்திப்பில் வைத்திலிங்கம்தான் அந்த அறிக்கையை படித்தார். அந்த அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் இந்த உத்தரவால் மனம் உடைந்து போய் இருக்கிறாராம்.

இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கிறது. அவரின் தரப்பு ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓ பன்னீர்செல்வத்தை விட்டு வெளியேற உள்ளனர் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இந்த தீர்ப்பு எடப்பாடிக்குத்தான் சப்போர்ட்டாக உள்ளது. இதேபோன்று தீர்ப்பு பொதுக்குழு வழக்கிலும் வரலாம். அதனால் எடப்பாடி கேம்பிற்கு செல்ல வேண்டியதுதான் என்று நிர்வாகிகள் சிலர் முடிவு செய்துள்ளனராம். முக்கியமாக தென் மண்டலத்தில் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் நிர்வாகிகள் சிலர் வரும் நாட்களில் எடப்பாடி அணிக்கு தாவ போவதாக ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி தரப்பிற்கு இந்த தொடர் சம்பவங்கள் பெரும் ஏக, மகிழ்ச்சியை கொடுத்துள்ளன!

பொதுக்குழுவே செல்லாது என்று சொல்லிதான் ஓ.பி.எஸ். தரப்பு வழக்கப் போட்டது. ஆனால், அந்த பொதுகுழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்தான் வேட்பாளரை இறுதி செய்தார் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருப்பது, பொதுக்குழு தீர்ப்பும் எடப்பாடி சாதகமாக விரைவில் வரும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal