கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கவனிக்க பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும். ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணமாக காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டபேரவை தேர்தலை கவனிப்பதற்கு மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாஜகவின் பொறுப்பாளராக அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் பாஜகவின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்தவர். அவரது பணிக்காக அம்மாநிலத்தில் ‘கர்நாடக சிங்கம்’ என்று மக்களால் அழைக்கப்பட்டவர். கர்நாடக மக்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர் என்பதால் இந்த தேர்தலில் அவரது பங்களிப்பை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal