அ.தி.மு.க. பொதுக்குழு கூடி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அதிமுக பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கியதை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும். அதிமுக பொதுக்குழு மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று மனுதாக்கல் செய்துள்ளது.
இந்த முறையீட்டில் தேர்தல் ஆணையம் செய்துள்ள பதிலில், அதிமுக சார்பாஜ் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. இந்த பொதுக்குழு நடந்த விதத்தை நாங்கள் இன்னும் ஏற்கவில்லை. எடப்பாடியை இன்னும் நாங்கள் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை, என்று கூறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் இன்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், இப்போதும் இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால் நான் கையொப்பம் இடத்தயார். பொது வேட்பாளரை நிறுத்தினால் அதை ஏற்றுக்கொள்ள தயார். சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. பொதுவாக ஒரு வேட்பாளரை நிறுத்தினால் கண்டிப்பாக அதை ஆதரிக்க நான் தயார். பி பார்மில் நான் கையெழுத்து போட தயார், என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.
இது நல்ல யோசனையாக தானே இருக்கிறது. பொது வேட்பாளரை ஏன் நிறுத்த கூடாது. இரண்டு தரப்பிற்கும் ஏற்ற வேட்பாளரை ஏன் நிறுத்த கூடாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அதற்கு எடப்பாடி தரப்பு, இல்லை அது முடியாது என்று எடப்பாடி தரப்பு இதற்கு வாதம் வைத்தது. இதற்கு பொது வேட்பாளரை நிறுத்துங்கள். அந்த பொது வேட்பாளரின் வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இரு தரப்பும் அடித்துக்கொள்வார்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள். இரண்டு தரப்பும் ஒன்றாக சேர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. வேட்பாளரை நிறுத்த ஏன் பொதுக்குழுவை கூட்ட கூடாது என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு எடப்பாடி தரப்பு, இந்த வேட்பாளர் பொதுக்குழு அடிப்படையில், திருத்தப்பட்ட விதிகள் மூலம் உருவான அதிமுக நிர்வாகிகள் குழு தேர்வு செய்த வேட்பாளர்தான். அதனால் இவரை பொதுக்குழு தேர்வு செய்த வேட்பாளராக கருத வேண்டும், என்றனர்.
இதற்கு ஓ பன்னீர்செல்வம் தரப்பு, தென்னரசை பொதுக்குழு தேர்வு செய்த வேட்பாளராக ஏற்க கூடாது. ஏனென்றால் இன்னும் பொதுக்குழுவை நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை, என்றது. இதையடுத்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெற வேண்டும் . வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே,என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் கையெழுத்துப் போட அவசியம் ஏற்படவில்லை. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போட்டாலே போதும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஆனால், அ.தி.மு.க.வைப் பொறுத்தளவிற்கு இது இடைக்கால நிவாரணமே தவிர… நிரந்திர நிவாரணம் கிடையாது!