நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடுகிறது. நாளை ஜனாதிபதி திரவுமுர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றம் கூடும் நிலையில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. டெல்லியில் இன்று பிற்பகல் பிரதமர் மோடி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் லோக்சபா குழு தலைவரான ஓ.பி.ரவீந்தரநாத் எம்.பி.க்கு இந்த அழைப்பை பாஜக அனுப்பி உள்ளது.

ஆனால் ஓபி ரவீந்தரநாத்தை அதிமுக லோக்சபா குழு தலைவராக ஏற்கக் கூடாது என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அனைத்து கட்சிகள் கூட்டங்களுக்கு ஓபி ரவீந்தரநாத் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கும் ஓபி ரவீந்தரநாத் அழைக்கப்பட்டுள்ளார். இது இபிஎஸ் தரப்பை கடும் அதிருப்தி அடைய செய்8துள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், அவரது மகன் ஓபி ரவீந்தரநாத் உள்ளிட்டோர் நீக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பு கூறுகிறது. ஆனால் ஓபிஎஸ்தான் இன்னமும் ஒருங்கிணைப்பாளர்; அவரது பதவி காலாவதியாகவில்லை என்கிறது அவரது தரப்பு. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த 2 வாரங்களில் தீர்ப்பு வழங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி இபிஎஸ் தரப்பு இடையீட்டு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம், ஓபிஎஸ் தரப்பு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதேநேரத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பான உத்தரவுக்கும் பொதுக்குழு வழக்கின் தீர்ப்புக்கும் தொடர்பு இல்லை என்பதையும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்நிலையில்தான் டெல்லியில் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு ஓபிஎஸ் மகன் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal