இரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது தொடர்பாக, நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கின்றனர்.

2021 சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த தொகுதிக்கான இடைதேர்தலை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது.

போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நாளை முதல் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அமைச்சர்கள் படை அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது. தேர்தல் பிரச்சார களத்தில் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தேமுதிக, நாம்தமிழர் கட்சி, அமமுக கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். பாஜக போட்டியிடாது என்பதை சூசமாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால், உட்கட்சி பூசல் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பு 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது. அதே போல ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் தங்கள் சார்பில் தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய வசதியாக, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதிகளிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முறையிட்டனர்.

இடைதேர்தலில் அதிமுகவின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஈ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை, தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஈபிஎஸ் தரப்பிலான அந்த மனுவில், பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் உள்ளிட்ட தேதிகளைக் கேட்டறிந்த நீதிபதிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளுக்குள் உத்தரவுகள் வரவில்லை என்றால் இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.

எழுத்துப்பூர்வ முறையீட்டுக் கோரிக்கை வழங்கவும், மீண்டும் திங்கட்கிழமை முறையீடு செய்யவும் ஈபிஎஸ் தரப்பை அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி இன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடையீட்டு மனுவிற்கு 3 நாட்களில் பதில் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனிச்சாமியின் இடையீட்டு மனு மீது மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாளுக்குள் தீர்ப்பு வழங்க முடியாவிட்டால், நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் ஏற்கனவே உறுதியளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் அளிக்கும் பதிலைப்பொருத்தே ஈரோடு கிழக்குத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal