ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தளவில் பா.ஜ.க. எந்த நிலைப்பாடு எடுக்க இருக்கிறதோ, அதன் பிறகுதான் ஓ.பி.எஸ். வேட்பாளரை அறிவிப்பார் என்று பெங்களூரு புகழேந்தி கூறியிருக்கிறார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் கூட வேட்பாளரை அறிவித்த நிலையில் ஓ-.பி.எஸ். நிலைதடுமாறி இருப்பது பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், எங்களுக்கும் ஓ-.பி.எஸ். தனித்து போட்டியிட்டு, எடப்பாடியின் கோட்டையில் தனது செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், அப்படி ஓ.பி.எஸ். நடந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. ஓ.பி.எஸ்.ஸை வைத்து தமிழக பா.ஜ.க. அ.தி.மு.க. ஆட்டம் காண வைக்கிறது என்பதை சிறு குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், அப்படியிருந்தும் கசாப்பு கடைக்காரனை ஆடு நம்புவது போல, ஓ.பி.எஸ். பா.ஜ.க.வை நம்புவதுதான் வேதனை அளிக்கிறது.

காரணம், அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்து கொண்டே, ஈரோடு கிழக்கில் பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஓ.பி.எஸ்.ஸை வைத்து எடப்பாடி பழனிசாமியை பணிய வைக்கப் பார்க்கிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 5 அல்லது 7 சீட்டுகள்தான் கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அடித்துச் சொல்லிவிட்டார். ஆனால், அண்ணாமலை 20&ல் ஆரம்பித்து 15&ல் உறுதியாக இருக்கிறார்.

அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, நமது கனவு பலிக்காது என நினைத்து ஓ.பி.எஸ்.ஸை வைத்து எடப்பாடிக்கு செக் வைக்கிறது பா.ஜ.க.! உண்மையிலேயே அ.தி.மு.க.வின் விசுவாசியாக ஓ-பிஎஸ் இருந்தால், ‘நாங்கள் பா.ஜ.க. போட்டியிட்டால் ஆதரவு கொடுப்போம் என்று கூறியிருக்க மாட்டார். எந்தவொரு செல்வாக்கும் இல்லாமல், பா.ஜ.க.வை வைத்து அ.தி.மு.க.விற்கு தலைமைப் பதவியை பிடிக்க வேண்டும் என்பதுதான் ஓ.பி.எஸ்.ஸின் குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், ஈரோடு கிழக்கு ஓ.பி.எஸ்.ஸுக்கு ஒரு பாடத்தை புகட்டிவிடும்’’ என்றவர் அடுத்து சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்!

அதாவது, ‘‘என்னால் இரட்டை இலை முடங்காது… எடப்பாடி யாரை வேட்பாளராக அறிவித்தாலும் கையெழுத்துப் போடத் தயார் என ஓ.பி.எஸ். கூறியிருப்பதன் பின்னணியே வேறு, அப்படி ஓ-பிஎஸ் கையெழுத்தைப் பெற்று எடப்பாடி நிறுத்தும் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் நின்றால், ‘இடைக்கால பொதுச் செயலாளர்…. பொதுக்குழு கூட்டம்…’ என அனைத்தும் செல்லாமல் போய்விடும்.

ஓருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிதான் இருக்கிறது. பாருங்கள்… ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நான் கையெழுத்து போட்டு சின்னத்தை பெற்றிருக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் மனுவை தாக்கல் செய்து, எடப்பாடியை காலி செய்வதுதான். இதில் இரட்டை இலை சின்னத்தை முடக்க நான் காரணமாக இருக்கமாட்டேன் என்று கூறுவது அபத்தம்’’ என்றார் ஓ-.பி.எஸ்.ஸின் ஆதரவாளரே?

பா.ஜ.க. ஏன் எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது பற்றி சிலரிடம் பேசினோம். ‘‘பா.ஜ.க.வுக்கு ஈரோடு கிழக்கு ஒரு இலக்கு கிடையாது. 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான். ஆனால், கிழக்கை வைத்து ஒரு ரிகர்சல் பார்த்துவிடலாமா? என யோசிக்கிறார் அண்ணாமலை. அப்படி ரிகர்சல் பார்த்தால், அது அண்ணாமலையின் பதவிக்குதான் விரைவில் ஆபத்து வரும்’’ என்றனர் விபரம் அறிந்தவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal