தமிழ்நாட்டில் தலையாய பிரச்னைகள் எத்தனையோ இருக்கையில், ‘தமிழகம்’ என்ற வார்த்தையை ஆளுநர் கொளுத்திப் போட பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ஆளுநர் புள்ளி வைக்க, கனிமொழி எம்.பி., ‘தமிழ்நாடு’ என்ற கோலம் போட்டு அசத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்மையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தியா முழுவதும் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி விட்டது. எதற்கெடுத்தாலும் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். மாநிலத்தை தமிழ்நாடு என்று அழைப்பதை விட தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமானது” எனப் பேசி இருந்தார். தமிழ்நாடு ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டானது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி கூடியது. அப்போது உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த ‘திராவிட மாடல்’, ‘அமைதி பூங்கா தமிழ்நாடு’ ஆகிய சொற்றொடர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்தார். மேலும், சமூ கநீதி, சுயமரியாதை உள்ளிட்ட வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல் அப்படியே விட்டு விட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மேலும் பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோரின் பெயர்களையும் குறிப்பிடாமல் தவிர்த்தார் ஆளுநர் ரவி. இந்த விவகாரம்தான் இன்றைக்கு ஆளுநர் மற்றும் தி.மு.க. எம்.பி.க்களை டெல்லி வரை செல்ல வைத்திருக்கிறது.

ஆளுநரின் ‘தமிழ்நாடு’ பற்றிய கருத்து தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, “நம் மொழி – பண்பாடு – & அரசியல்- வாழ்வியலின் அடையாளம் “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், கூட்டங்களில் பேசும்போது, “தமிழ்நாடு என்று ஏன் அழைக்கிறீர்கள் தமிழகம் என்று அழைக்க வேண்டியது தானே என்று ஆளுநர் சொல்கிறார். நமது அடையாளம், கலாச்சாரம் பண்பாடு வரலாற்றில் ஆளுநர் மூக்கை நுழைக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் நாம் தமிழர்களாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக பெருமையுடன் இந்த பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும்” எனப் பேசினார்.

தமிழ்நாட்டை காக்க அனைவரும் சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி கேட்டுக் கொண்டார். இந்தப் பின்னணியில், தற்போது கனிமொழி, தனது நண்பர்கள், முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் தொண்டர்களுக்கு பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து, வாழ்த்து அட்டைகளை அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து அட்டையில் இடம்பெற்றுள்ள ‘கோலம்’ அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பண்டிகை நாட்களில் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாசல்களில் கோலமிடுவது தமிழர் மரபு. அந்த வகையில், பொங்கலுக்கு வாழ்த்துச் சொல்லி கனிமொழி அனுப்பிய வாழ்த்து அட்டைகளில் ஒரு கோலம் இடம்பெற்றுள்ளது. கம்பிக் கோலம் போன்ற அந்த வடிவமைப்பு, ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தையாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. வளைந்து, நெளிந்து தமிழ்நாடு என்ற சொற்கள் கோலம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. ஆளுநரின் கருத்துக்கு எதிரான போராட்ட வடிவமாக கனிமொழி முன்னெடுத்துள்ள இந்த ‘தமிழ்நாடு’ கோலம் திமுகவினர், பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏற்கனவே, 2019ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களோடு கோலம் போட்ட திமுகவைச் சேர்ந்த பெண்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து, வாசகங்களை அழிக்கச் செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது வீட்டு வாசலில் கோலமிட்டு, குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக வேண்டாம் சிஏஏ, வேண்டாம் என்.ஆர்.சி என கோலமாவு மூலம் எழுதி எதிர்ப்பு தெரிவித்திருந்தார் கனிமொழி எம்.பி.

தற்போது ஆளுநருக்கு எதிராகவும் ‘தமிழ்நாடு’ என எழுத்துகளால் பின்னப்பட்ட கம்பிக் கோல வடிவமைப்புடன் பொங்கல் வாழ்த்து அட்டைகளை அனுப்பி வருகிறார் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal