முன்னாள் எம்.பி., மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்!
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் டிரைவராக வேலை செய்து வந்தார். அவர் அழைத்துச் சென்ற போதுதான் மஸ்தான் உயிரிழந்திருந்தார். காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மஸ்தானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோதுதான் உயிரிழந்தது தெரியவந்தது என்றும் இம்ரான் கூறி இருந்தார்.
இது தொடர்பான உரிய விசாரணை அடுத்து, கடந்த 29ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக போலீசார் டிரைவர் உள்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தியதில் செல்போன் உரையாடல் குறித்து விசாரித்த போது மஸ்தான் கொலையில் அவரது தம்பிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரது தம்பியான கவுசே ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்தனர். பூர்வீக சொத்து தகராறு, பணப்பிரச்சினையே மஸ்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்றும் 5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணை (மஸ்தான்) கொன்றதாக போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை வழக்கில் கைதான இம்ரான் பாஷாவுடன் மஸ்தானின் தம்பி கொசே ஆதம்பாஷா செல்போனில் அதிக நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆதம்பாஷா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.