அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடந்தது. இன்றைய தினம் முழுக்க முழுக்க ஓ-பிஎஸ் தரப்பு தங்கள் வாதத்தை வைத்தது. இந்த நிலையில், வருகிற செவ்வாய்க் கிழமை (10ம்தேதி) எடப்பாடி தரப்பு முக்கிய வாதங்களை வைக்க இருக்கிறது.
மூன்று நாட்கள் இடைவெளியில் என்ன மாதிரியான வாதங்களை எடுத்து வைக்கலாம் என்று மூத்த வழக்கறிஞர்களுடன் எடப்பாடி தரப்ப தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
கடந்த ஒன்றரை நாட்களாக வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார் வாதம் வைத்தார். அதிமுக பொதுக்குழு, விதிகள், கட்சியில் உள்ள பொறுப்புகள் பெயர்கள், அதன் விளக்கங்கள் என்று பலவற்றையும் அவரே விளக்கினார்.
உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பும், வைரமுத்து தரப்பும் ஒரே கோரிக்கைகளை வைக்கிறது. இதனால் வழக்கில் பன்னீர்செல்வம் வைரமுத்து தரப்பு வைத்த அதே வாதங்களை வைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதை பன்னீர்செல்வம் தரப்பு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், அதிமுக பொதுக்குழு சட்டப்படி கூடவில்லை. பொதுக்குழுவில் விதிகள் மீறப்பட்டு உள்ளன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பின்னர் ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவை சட்டப்படி கூட்டப்படவில்லை. கட்சியில் தொண்டர்களுக்கே அதிக உரிமை உள்ளது. திமுகவிலிருந்து பொதுகுழு உறுப்பினர்களால் வெளியேற்றப்பட்டதால் தான் எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். அப்போதே பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே முடிவு எடுப்பதை எம்ஜிஆர் எதிர்த்தார். எம்ஜிஆருக்கு அது கசப்பான அனுபவமாகவே அவருக்கு இருந்தது. அதனால் கட்சியில் தொண்டர்களுக்கு அதிக பலம் இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நினைத்தார். எப்போதும் கட்சி முடிவுகளை அடிப்படை தொண்டர்கள் மூலமே எடுக்க வேண்டும் என்பதை அவர் விரும்பினார்.
அதனால் தொண்டர்கள் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவும் இதைதான் கடைபிடித்தார். எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கிய போதும் இதேபோல் உருவாக்கினோம். அப்படி இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு மூலமாக இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி உள்ளார். எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை, அவரின் எண்ணத்தை, கட்சி உருவாக்க எம்ஜிஆர் வைத்து இருந்த மூல காரணத்தையே எடப்பாடி மீறிவிட்டார். பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால் நான்தான் வெற்றி பெறுவேன் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது.
இதில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டுமா? கட்சியின் நலன் பற்றி கவனத்தில் கொள்ள வேண்டுமா என்று பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். இதன் அடிப்படையிலேயே ஓபிஎஸ், தரப்பின் வாதம் வழக்கு எங்கே எடப்பாடிக்கு எதிராக செல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் எடப்பாடி தரப்பு இதற்கு அடுத்து வாதம் வைக்க உள்ளது. அதில் வழக்கில் திருப்பங்கள் ஏற்படலாம். எடப்பாடி வாதம் வைக்க நேரம் எடுக்கும் என்பதால் வழக்கு செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, சட்டமன்ற உறுப்பினர்கள், மா.செ.க்கள் உள்பட கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்களின் பெரும்பான்மை எடப்பாடிக்குத்தான் இருக்கிறது என்பதை ஆதாரப் பூர்வமாக நிரூபிக்க சில ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருக்கிறார்களாம். அதே சமயம், ஒரு கட்சிக்கு தலைவராக வேண்டும் என நினைப்பவர், எதிர்க்கட்சியுடன் ரகசிய தொடர்பில் இருக்கலாமா? இதையும் ஆதாரப் பூர்வமாக எடப்பாடி தரப்பில் வாதமாக எடுத்து வைக்க இருக்கிறார்களாம்.
எடப்பாடி தரப்பு மற்றும் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர்கள் சி.ஏ.சுந்தரம், முகுல் ரோத்தஹி ஆஜராக இருப்பதால், வழக்கில் திசை செவ்வாய்க் கிழமை மாறலாம் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது!