சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடை அருகிலேயே இருந்து, போலீசார் வாயை ஊத சொல்லி பத்தாயிரம் ரூபாய் அபராதம் போடுவதுதான் ‘குடி’மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்ச்சியிருக்கிறது.

கடந்த சில திங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண், ‘நான் ஓ-.சி.யில்தான் குடிக்கப் போனேன்… என்னிடம் பணம் இல்லை… நான் எப்படி பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டுவது?’ என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இந்த சம்பவம் வலைதளங்ளில் வந்து பேரதிர்ச்சியை எற்படுத்தியிருக்கிறது.

யார் மீது குற்றம்..?

கடந்த 20 ஆண்டுகளாக சட்டமன்றத் தேர்தலின் போது படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை அடித்துச் சொன்னார்கள்… ஆனால், முதல்வரானவுடன் அதை செய்தார்களா..? கிடையாது! சந்துக்கு சந்து டாஸ்மாக் கடைகளை அதிகமாக திறந்து வைத்ததுதான் சாதனை!

கடந்த காலங்களில் ‘குடிப்பதற்கு’ பயந்து பயந்து சென்றார்கள். யாரும் பெரியவர்கள் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று..? ஆனால் இன்றைக்கு குடிப்பதற்கு வயதுக்கு தகுந்த… காசுக்கு தகுந்த இடங்களை பார்களிலேயே வைத்து குடிக்க வைக்கிறார்கள்! அப்போது எங்கிருந்து பயம் வரும் இளசுகளுக்கு?

இப்படி, அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை அதிகளவில் திறந்து வைத்துவிட்டு, குடித்து விட்டு வருபர்வகளை பிடித்து பத்தாயிரம் ரூபாய் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று குமுறுகிறார்கள் குடிமகன்கள்!

இது பற்றி சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசினோம், ‘‘சார், ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை அதிகப்படுத்திதான் வருகிறார்கள். இதனை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்!

தங்கள் சம்பாதிக்கும் பணத்தை மதுக்கடைகளிலேயே கொடுத்து, குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். இதைவிடக் கொடுமை தினக்கூலிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்படியெல்லாம் சம்பாதிக்கும் பணத்தை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து குடித்துவிட்டு, அடுத்த அரை கிலோ மீட்டர் கூட தொலைவு இருக்காது, ‘வாயை ஊது?’ என நிற்கிறார்கள்.

பலபேர் ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்கள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்டித்தான் ஆக வேண்டும். இதே நிலை நீடித்தால் நாட்டின் நிலை என்னவாகும்..?’’ என்றார் வருத்தத்துடன்!

இதில் யார் குற்றவாளி என்பதை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்து… ஒரு நல்ல தீர்ப்பை (தேர்தலில்) வழங்குங்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal