ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு அதிமுக அலுவலகத்திற்கு தமிழக தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக, தேமுதிக, ஐயுஎம்எல், பாமக கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் கடிதத்தினால் அதிமுகவில் மீண்டும் இரட்டைத்தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. நான்தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னாலும் ஓ.பன்னீர் செல்வம் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே முன்பு கடிதம் அனுப்பப்பட்டது. அப்படிப்பட்ட பதவியில் இங்கு யாரும் இல்லை என அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.
இந்த கடிதம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ கூறும்போது, ‘‘தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது என தெரிவித்தார். இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு மீண்டும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளில் யாரும் இல்லை என ஏற்கனவே கடிதத்தை அதிமுக அலுவலகம் திருப்பி அனுப்பியது. தலைமை தேர்தல் ஆணைய ஆணைகளின்படியே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டதாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில அதே கடிதத்தை மீண்டும் அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஒற்றைத்தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை பற்ற வைத்த நிலையில் இரட்டை தலைமை சர்ச்சையை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் கடிதம். இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிர்ச்சியில் உள்ளது!