தமிழக அரசின் நிதி நிலை அதலபாதாளத்தில் இருப்பதால், அதனை சரி செய்து வரும் வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இறங்கியிருக்கிறார்! இந்த நிலையில்தான் ‘சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும்’ என இடை நிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டன.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனது இல்லத்திற்கே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ஆனால், அது தோல்வி அடைந்தது. இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளரின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து, இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது’’ என குறிப்பிட்டு இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து சென்னை டி.பி.ஐ வளாகத்தில் நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கின்றனர்.

ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தின் பின்னணியில் ‘அரசியல்’ கட்சிகள் இருக்கிறதா என்ற சந்தேகத்தையும் நடுநிலையாளர்கள் எழுப்பியிருக்கின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal