ராகுல் காந்தியின் ‘புதிய அவதாரம்’ தொடர்ந்தால், 2024ம் ஆண்டு தேசிய அளவில் மாற்றம் ஏற்படும் என சிவசேனா எம்.பி. கூறியிருப்பதுதான் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தயிருக்கிறது.

உத்தவ் பால்சாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘‘ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது. அதை சொல்லி இனிமேல் ஓட்டு வாங்க முடியாது. எனவே ‘லவ் ஜிகாத்’ என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவும், இந்துக்கள் இடையே பயத்தை ஏற்படுத்தவும் ‘லவ் ஜிகாத்’ ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா?. நடிகை துனிஷா சர்மா, ஷரத்தா கபூரின் மரணம் லவ் ஜிகாத் என கூறமுடியாது. எந்த மதம், சமூகத்தை சேர்ந்த பெண்களும் வன்முறைக்கு ஆளாக கூடாது.

2023-ல் நாடு அச்சம் இல்லாததாக மாறும் என நம்புகிறோம். அதிகாரத்தின் அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. ராகுல் காந்தியின் யாத்திரை வெற்றி பெறும் எனவும், அதன் இலக்கை அடையும் என நம்புகிறோம். 2022-ம் ஆண்டு ராகுல் காந்தியின் தலைமைக்கு புதிய ஒளியையும், அவதாரத்தையும் கொடுத்தது. 2023-லும் அது தொடர்ந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் அரசியல் மாற்றத்தை காண முடியும். பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மையை விட வேண்டும் என்கிறார்.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் குறுகிய மனப்பான்மையுடன், எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் அங்கீகரிக்க விரும்பவில்லை. இந்து, முஸ்லிம் இடையே பிளவை தூண்டுவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும். மோடியும், அமித்ஷாவும் வெறுப்பு மற்றும் பிரிவினையை விதைக்க கூடாது. இந்துக்களை விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் கொள்கை. அதற்காக சமூகத்தில் வெறுப்பையும், பிரிவினையையும் உருவாக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal