ஒன்பது வருடங்கள் கழித்து விஜய் மற்றும் அஜீத் ஆகியோரது படங்கள் ‘நேருக்கு நேர்’ மோதிக்கொள்கின்றன. இது ரசிகர்களுக்கு ‘பொங்கல்’ விருந்தாக அமைய இருக்கிறது.
ரசிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், இவர்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் திரையரங்கு ஒதுக்குவதில் தொடங்கி முதல் நாள் முதல் காட்சி, எந்த படத்துக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது வரை பிரச்சனைகள் பஞ்சமின்றி போய்க் கொண்டிருக்கிறது.
இந்த சூழலுக்கு மிக முக்கிய காரணம் துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியதே. ஆரம்பத்தில் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் வாரிசு படத்தின் வெளியிட்டு உரிமையை வாங்க முற்பட்டது, ஆனால் வாரிசு பட குழு அதை மறுத்து விடவே துணிவு படத்தை வெளியிட முடிவு செய்தது. தற்போது இறுதியாக 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்திடம் வாரிசு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமை கொடுக்கப்பட்டது.
உதயநிதி அவர்கள் தன்னுடைய திரைப் பயணத்தை ஒரு தயாரிப்பாளராக விஜய்யை வைத்து குருவி படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் அவர்களின்தேதிக்காக நீண்ட நாட்களாககாத்திருந்து அந்தப் படத்தை தயாரித்தார். இந்த அளவு இருவரும் பரஸ்பரம் நட்புடனே இருந்தனர் சமீபத்தில் ஒரு பேட்டியில் உதயநிதி அவர்கள் சில வருடங்களாக ஒரு சில காரணங்களால் விஜய் அவர்களிடம் பேசுவதில்லை எனக் கூறினார், எதனால் இவர்களுக்குள் விரிசல், விழுந்தது என்று மர்மமாகவே உள்ளது. இருந்தும் விஜய்யின் முந்தைய படமான பீஸ்ட் படத்தினை ரெட் ஜெயிண்ட் நிறுவனமே வெளியீடு செய்தது. தற்போது வாரிசு படத்தினை ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு கொடுக்காமல் போனதற்கான காரணங்கள் பல சொல்லப்படுகின்றன.
இந்நிலையில் வரும் டிசம்பர் 16 அன்று அவதார் படம் ரிலீஸ் ஆகிறது இந்த படத்தையும் ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுகிறது. எந்தெந்த திரையரங்குகளுக்கு அவதார் படம் வேண்டுமோ அந்தந்த திரையரங்குகள் கண்டிப்பாக துணிவு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களுக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் உண்டு.
இதை தொடர்ந்து வரும் டிசம்பர் 24 இல் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மற்றும் வருகிற ஜனவரி மாதம் 1ஆம் தேதி ஆங்கில வருடப்பிறப்பு அன்று வாரிசு படத்தில் ட்ரெய்லர் வெளியிடப்போவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.ஏற்கனவே வாரிசு படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இந்த படத்தில் மற்ற பாடல்களையும் கேட்க ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.
சமீப காலமாக தன் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகளை தனது அரசியல் மேடையாக பயன்படுத்தி வருகிறார் விஜய். ‘சர்கார்’ பட பாடல் வெளியீட்டின் போதும், அரசியல் விமர்சனங்களை பொதுமேடையிலேயே வைத்தார். இம்முறை தன் மீது தொடுக்கப்படும் அம்புகளுக்கு இந்த விழா மேடையில் உதயநிதி அவர்களுக்கு பதிலடி கொடுக்க பயன்படுத்திக் கொள்வாரா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.