‘நாளைய நாடாளுமன்றமே… வருங்கால பாராளுமன்றமே..!’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் திருச்சி மாநகரை திணறடித்துவிட்டது.

எதற்காக இப்படி போஸ்டர்களை உடன் பிறப்புக்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தினார்கள் என்கிறீர்களா… அதாங்க… மலைக்கோட்டை மன்னரின் வாரிசான அருண் நேருவின் பிறந்த நாளையொட்டிதான் போஸ்டர்களும், கட் அவுட்களும் ஜொலித்தன!

கடந்த டிசம்பர் 12&ந்தேதி அருண் நேருவின் பிறந்தநாளை, இந்தாண்டு வெகுவிமரிசையாக கொண்டாடி தீர்த்துவிட்டனர் உடன் பிறப்புக்கள்! காரணம், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு போட்டியிடுவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

இது பற்றி திருச்சி மலைக்கோட்டை உடன் பிறப்புக்களிடம் பேசினோம்.

‘‘சார், அமைச்சர் நேருவின் மகன் அருண் நேருவை பொறுத்தவரை சென்னையில் தொழிலதிபராக இருந்து வருகிறார். தனது சித்தப்பாக்களோடு சேர்ந்து தொழில்களை கவனித்து வரும் அவரை, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் வம்படியாக அரசியலுக்குள் இழுத்து விட்டுள்ளனர். அவரும் ஆதரவாளர்களின் அன்புத் தொல்லையை ஏற்று திருச்சியில் அதிக நாட்கள் தங்கத் தொடங்கியிருப்பதுடன் கட்சிக்காரர்கள், ஆதரவாளர்கள் இல்ல விழாக்களில் தலைக்காட்ட ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் அருண் நேருவுக்கு பிறந்தநாள் என்பதால் போஸ்டர்கள், விளம்பர பேனர்களால் திருச்சி மாநகரையே அவரது ஆதரவாளர்கள் திணறடித்துவிட்டனர். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக உதயநிதியின் அடைமொழியான சின்னவர் என்ற வார்த்தையை அருண் நேருவுக்கு சூட்டி மகிழ்ந்திருந்தனர் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள். முதன்மையின் முத்தே, திருச்சியின் எம்.பி.யே என மனதில் பட்டத்தையெல்லாம் பேனர்களில் பிரசுரித்து விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

திருச்சி தில்லை நகர் அலுவலகத்தில் கட்சிக்காரர்களின் வாழ்த்தை பெற்றுக்கொண்ட அருண் நேரு, அதன்பிறகு சென்னை புறப்பட்டுச் சென்று தனது தந்தை நேருவிடம் வாழ்த்து பெற்றார். கையோடு அவரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்’’ என்றனர்!

பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு போட்டியிடுவது பற்றி தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தளவிற்கு ஒரே கட்சி இரண்டு முறை வென்றதாக சரித்திரம் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. என மாறி மாறிதான் வெற்றி பெற்று வருகின்றது. தற்போது தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் (பச்சமுத்து ) எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு முன்பு அ.தி.மு.கவைச் சேர்ந்த மருதைராஜா எம்.பி.யாக இருந்தார்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில், கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிட போவதாக தகவல்கள் வருகிறது. இந்த நிலையில்தான் மண்ணச்சநல்லூர், முசிறி பகுதி நிர்வாகிகள் மற்றும் துறையூர் ஒன்றியச் செயலாளர் அண்ணாதுரை, நகர துணைச் செயலாளர் ‘மெடிக்கல்’ முரளி, உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் ந.அசோகன் உள்ளிட்டோர் தற்போதே களப்பணியில் இறங்கிவிட்டனர்.

எனவே, மாறி மாறி வெற்றி வாய்ப்பு என்ற நிலையை மாற்றி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அருண் நேருவை வெற்றி பெற வைப்பது உறுதி’’ என்றனர்.

தி.மு.க.வில் தற்போது எந்த பதவியிலும் இல்லாத அருண் நேரு, விரைவில் எம்.பி.யாக வலம் வருவார் என்பதே மலைக்கோட்டை உடன் பிறப்புக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal