‘என்னை ஒரு நபர் தவறான நோக்கத்தில் தொட்டார். நான் அவரை அடித்துவிட்டேன்’ என்று ‘கட்டா குஸ்தி’ பட நடிகை கூறியிருப்பதுதான் தமிழ்த் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது!

மலையாளத்தில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி, ‘மாயாநதி’படம் மூலம் மலையாளம் தாண்டி, பிற மொழி சினிமா ரசிகர்களையும் ஈர்த்தார்.தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷூடன் ‘ஜெகமே தந்திரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஐஸ்வர்யா லெஷ்மி, புத்தம்புது காலை, கார்கி, கேப்டன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லெஷ்மி நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியான நிலையில், குஸ்தி வீராங்கனையாக நடித்துள்ள அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ள ஐஸ்வர்யா தன்னை தவறாக தொட்ட நபரை அடித்ததாகத் தெரிவித்துள்ளார்.

“நகைச்சுவையை மையமாக வைத்து தயாரான எந்தப் படத்திலும் இதுவரை நடிக்காமல் இருந்த எனக்கு முதல் தடவையாக ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் எனக்கு ஒரு சவாலாகவும் இருந்தது. சமீப காலமாக நகைச்சுவைப் படங்கள் அதிகம் வரவில்லை. நான் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களில் சர்வ சாதாரணமாக நடித்து விடுவேன். ஆனால் நகைச்சுவையாக நடிப்பது கஷ்டம்.

குஸ்தி வீராங்கனையாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். என் பாத்திரத்தை சவாலாக ஏற்று நடித்திருக்கிறேன். ஏற்கனவே ஒருவரை நான் அடித்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் என்னை தவறாகத் தொட்டார். அதனால் அடித்து விட்டேன். சமீப காலமாக அப்படி யாரையும் அடித்த அனுபவம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal