அகல் விளக்கில் தீபம் காற்றில் அணியாமல் எறிய:
வெளியில் கோலத்தின் மேல் பால்கனியில் வைக்கக்கூடிய விளக்குகள் பெரும்பாலும் காற்றில் அணைந்து விடும். இதற்கு என்ன செய்யலாம். கார்த்திகை தீபம் வருவதற்கு முன்கூட்டியே உங்கள் வீட்டில் இருக்கும் விளக்கு திரிகளை தடிமனாக திரித்து தயார் செய்து கொள்ளுங்கள். பஞ்சித்திரியாக இருக்கட்டும். நூல் திரியாக இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் அந்த திரிகளை இரண்டு திரிகளாக திரித்து தடிமனாக தயார் செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அந்த திரியில் முன்கூட்டியே நல்லெண்ணெய் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். (எண்ணெயில் திரி இரண்டு நாள் நன்றாக ஊற வேண்டும்.)
அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றிவிட்டு இந்த ஊற வைத்திருக்கும் திரிகளை எண்ணெயில் போட்டு, திரிக்கும் முனையில் கொஞ்சமாக கற்பூரத்தை தூள் செய்து வைத்து விட வேண்டும். இப்படி நல்லெண்ணையில் முன்கூட்டியே ஊற வைத்த தடிமனான திரியின் முனையில் கற்பூரம் வைத்து தீபம் ஏற்றும் போது விளக்கு நின்று எரியும். சீக்கிரம் காற்றில் அணையாது.
பழைய விளக்கை சுலபமாக சுத்தம் செய்யும் முறை:
நிறைய பேர் கார்த்திகை தீபத்திற்கு வருடக் கணக்கில் ஏற்றிய பழைய விளக்குகளை எடுத்து வைத்திருப்பார்கள். அது கறி பிடித்து அழுக்காக இருக்கும். எரிகின்ற அடுப்பின் நெருப்பில் பழைய அகல் விளக்குகளை எல்லாம் போட்டு எரித்து சூடு தணிந்ததும், அதை எடுத்து மீண்டும் நல்ல தண்ணீரில் கழுவி வெயிலில் காய வைத்தால் அந்த விளக்குகள் எல்லாம் புது விளக்கு போல மாறிவிடும்.
அடுப்பு எல்லோர் வீட்டிலும் இல்லை. உங்களுடைய வீட்டில் இடம் இருந்தால், விறகில் நெருப்பு மூட்டி இந்த ஐடியாவை முயற்சி செய்து பார்க்கலாம். அதற்கும் வழியில்லை என்பவர்கள் ஒரு அகலமான பாத்திரத்தில் சுடுதண்ணீரை ஊற்றி, பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி, அதில் பழைய மண் அகல்விளக்குகளை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு நல்ல தண்ணீரில் கழுவி அதன் பின்பு அதை எடுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ளலாம்.
ஈரமாக இருக்கக்கூடிய விளக்குகளை நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து முன்கூட்டியே விளக்குகளை தயார் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். புதியதாக விளக்கு கட்டாயமாக கார்த்திகை தீபத்திற்காக நாம் வாங்க வேண்டும். அதை சுத்தமான மண் அகல் விளக்காக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒற்றைப்படையில் வாங்க வேண்டும். 5, 7, 11 என்ற கணக்கில் வாங்கி அந்த விளக்கை சுடுதண்ணீரில் போட்டு இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கலாம். முடிந்தால் இரவு முழுவதும் அதை தண்ணீரில் போட்டு ஊற வைத்தால் எண்ணெய் குடிக்காமல் இருக்கும்.
இப்படி தண்ணீரில் ஊற வைத்த விளக்கை சிறிது நேரம் வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள். அதன் பின்பு அதற்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து தீபத்தன்று விளக்கு ஏற்றுக் கொள்ளலாம். தீபத்திற்கு முந்தைய நாலே மஞ்சள் குங்குமம் பொட்டை வைத்து விளக்குகளை தயார் செய்து வைக்க வேண்டும்.
விளக்கில் இருந்து எண்ணெய் கசியாமல் இருக்க:
உங்களுடைய வீட்டில் பழைய நெயில் பாலிஷ் இருந்தால் கூட அடிப்பக்கம் உள்பக்கம் மட்டும் அந்த வர்ணத்தை தீட்டிக் கொள்ளுங்கள். குழந்தைகள் பெயிண்ட் பண்ணுவதற்காக வீட்டில் வைத்திருப்பார்கள் அல்லவா அந்த கலரை கூட பிரஷில் தொட்டு அகல் விளக்கின் மேல் தீட்டு வெயிலில் காய வைத்து விட்டால், விளக்கிலிருந்து எண்ணெய் கசியாமல் இருக்கும்.
விளக்குக்கு அடியில் அட்டை, ஃபாயில் பேப்பர், என்று வைத்து விளக்கு ஏற்றுவதைவிட, வெற்றிலை, செம்பருத்தி பூ இலை, அரச இலை, இவைகளுக்கு அடியில் மண் அகல் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றுவது சிறப்பு. தரையில் எண்ணெயும் வடியாமல் இருக்கும்.