ஓ.பி.எஸ்.ஸுக்காக நாள்தோறும் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி வந்த கோவை செல்வராஜுக்கு ‘திடீர்’ ஞானோதயம் ஏற்பட்டிருப்பதுதான் அ.தி.மு.க.வில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

‘‘ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரு சுயநலவாதிகளுடன் இருக்க விரும்பவில்லை. அதிமுகவைவிட்டு விலகுகிறேன்’’ என கோவையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் பரபரப்பாக பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வம் நல்ல நேர்மையான மனிதர் என நினைத்து நான் அதிமுகவுக்கு கடுமையாக உழைத்தேன். அவருக்காக விசுவாசமாக பணியாற்றி வந்தேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து எனது மனசாட்சிபடி பேட்டி அளித்தேன். ஜெயலலிதாவின் உயிரைவிட முதல்வர் பதவிதான் முக்கியம் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே நான்கரை ஆண்டு காலம் செயல்பட்டு விட்டனர்.

ஜெயலலிதாவுக்காக நான் இந்த இயக்கத்தில் பணியாற்றி வந்தேன். ஜெயலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவன். அப்படி இருக்கையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரது செயல்பாடுகளை பார்க்கும்போது, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக சண்டைபோடுகிற இவர்களுடன் சேர்ந்துகொண்டு நாமும் கட்சியை அழிக்கிற முயற்சியில் ஈடுபடக்கூடாது என முடிவுஎடுத்து, இன்று முதல் இவர்களிடமிருந்து விலகுகிறேன். ஆனால், நான் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன்.

திராவிட பாரம்பரியம் எனது உடலில் ஓடுகிற ரத்தம் ஆகும். விரைவில் நல்ல முடிவு எடுப்பேன். ஒரு நாளும் அரசியலைவிட்டு விலகமாட்டேன். துரோகிகளோடு சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்பது உறுதி. அதிமுகவில் இருந்து என்னை நானே விலக்கிக்கொள்கிறேன். ஜெயலலிதாவைவிட பதவிதான் முக்கியம் என நினைத்து, இவர்கள் சுயநலத்துடன் பதவி சுகத்தை அனுபவித்து உள்ளார்கள்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து, அவரை உயிரோடு அழைத்து வர இவர்களால முடியவில்லை. இந்த செயலை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப்போன்று லட்சக்கணக்கான தொண்டர்கள் மனக்குமுறலுடன் இருக்கிறார்கள். அப்பல்லோ மருத்துவமனையில் முறையாக சிசிச்சை அளிக்கவில்லை. அந்த நேரத்தில் பதவியில் இருந்த இவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை. இதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’’ இவ்வாறு கோவை செல்வராஜ் கூறினார்.

கோவை செல்வராஜுக்கு ஏற்பட்டுள்ள மனமாற்றம் மற்றும் திடீர் ஞனோதயம் பற்றி கோவை ர.ர.க்களிடம் பேசியபோது,

‘‘சார், கோவை செல்வராஜ் மாதிரி உள்ள பச்சோந்திகள் அ.தி.மு.க.வில் இருக்க வேண்டாம். அவர் தி.மு.க.வில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையை செந்தில் பாலாஜியிடம் நடத்தி முடித்துவிட்டார். கிடைக்க வேண்டியது கிடைத்தவிடன், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் ஐக்கியமாகிவிடுவார். வேறு விஷயம் இருந்தால் கேளுங்கள்… அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்…’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal