கவர்னர் பதவி விவகாரம் தொடர்பாக தமிழிசை பேசியதற்கு, உடனடியாக பதிலடி கொடுத்திருக்கிறார் கனிமொழி எம்.பி.!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் பல சிக்கல்கள் எழுந்திருக்கிறது.

மேலும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பேசும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம், பாரதம், இந்து மதம் குறித்து பேசி வருகிறார். இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொடர்ந்து ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவரை திரும்ப பெற வேண்டும் என கடுமையாக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பல தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகின்றனர்.

ஆளுநருக்கு ஆதரவாக பாஜக, அதிமுக தரப்பில் ஓபிஎஸ் பேசி வரும் நிலையில், ஆளுநர் ரவிக்கு ஆதரவாக தமிழிசை சௌந்தரராஜன் வரிந்துகட்டி வருகிறார். ஏற்கனவே தெலுங்கானா புதுச்சேரி மாநில ஆளுநராக இருக்கும் அவர் தமிழக விவகாரங்கள் குறித்தும் தமிழக ஆளுநர் ரவிக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆளுநர் ரவி விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க திமுக கூட்டணி கட்சிகள் நேரம் கேட்டிருப்பதாக கனிமொழி கூறியிருந்தார். இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக ‘‘கவர்னர் பதவி என்பதே காலாவதியான ஒன்றுதான். கவனர் பதவி என்பது தேவையே இல்லாத ஒன்று. அதை புரிந்துகொண்டு ஆளுநர் பதவியை ரத்து செய்தால் பல சிக்கல்கள் இருக்காது’’ என பேசியிருந்தார் கனிமொழி.

இந்நிலையில் கனிமொழியின் கருத்துக்கு முன்னாள் பாஜக தலைவரும், தெலுங்கானா புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்திருந்தார். இது தொடர்பாக பேசிய அவர், ‘‘தமிழக ஆளுநர் காலாவதியானவர் என கருத்து சொல்வதை திமுக எம்.பி கனிமொழி தவிர்க்க வேண்டும். மரியாதை கொடுக்க கூடாது என்கிற எண்ணம் பல பேருக்கு உண்டு. கருத்து கூறலாம். ஆனால் மிக மோசமான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். தகுதியை வைத்து தான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆளுநர்கள் அல்ல’’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் எட்டையாபுரம் ரோடு ஏவிஎம் கமல்வேல் மஹால் முன்பு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி.யிடம், ‘ தகுதியை வைத்துதான் ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். வாரிசு அடிப்படையில் இல்லை’ என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியது குறித்து கேட்டதற்கு, ‘‘அவங்க அதெல்லாம் சொல்லக்கூடாது’’ என தமிழிசை சவுந்திரராஜனின் கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

வாரிசு அரசியலைப் தமிழிசை பேசலாமா…? கனிமொழி சரியாக பதிலடி கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் உடன் பிறப்புக்கள்!

தமிழகத்தைப் பொறுத்தளவில் ‘வாரிசு அரசியல்’ பற்றி யார் பேசினாலும், அது விவாதப் பொருளாக மாறும் என்பதை மறுக்க முடியாது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal