சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி.தினகரன் தான் என அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம்;- தமிழ்நாட்டில் திறமையில்லாத செயல்படாத முதல்வரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதையே கொள்கையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது திமுக அரசு. புரட்சி தலைவர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அரசு கேபிள் டிவி சேவையை திட்டமிட்டு திமுக அரசு முடக்கியுள்ளது.

ரூ.350 மதிப்புள்ள விளம்பர பேனருக்கு ரூ.7,906 என பில் போட்டு மோசடி செய்துள்ளது திமுக அரசு. மதுபானங்களுக்கான கலால் வரியை ஏய்த்து ஊழல் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. சென்னையில் டாஸ்மாக் பார் எதுவும் நடத்தப்படவில்லை என திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியால் கூற முடியுமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை என உயர்நீதிமன்றமே கூறியுள்ளது. விடியா திமுக ஆட்சியில் பணியாற்ற விருப்பமின்றி வேறு மாநிலங்களுக்கு ஒப்பந்ததார்கள் ஓடுகின்றனர்.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணம் டிடிவி.தினகரன் தான். இதன் காரணமாக தான் டிடிவி.தினகரன் ஜெயலலிதா வீட்டில் இருந்து விரட்டப்பட்டார். ஜெயலலிதா பற்றி பேச டிடிவி தினகரனுக்கு தகுதி இல்லை. அதிமுகவுக்கு டிடிவி.தினகரன் அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றினார். எம்எல்ஏவாக கூட தகுதியில்லாதவர் தினகரன். தினகரன் கட்சி நடத்தாமல் கோஷ்டி வைத்து நடத்தி வருகிறார் என சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal