அ.தி.மு.க.வின் பொன்விழா நிறைவையொட்டி திருச்சி அல்லது கோவையில் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய மாநாட்டை நடத்து, ஜெயலலிதாவைப் போல் ‘கெத்து’ காட்ட தயாராகி வருகிறார்!

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரின் ‘மாநாடு’ குறித்து சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஓ.பி.எஸ். உடன் ஏற்பட்டு உள்ள மோதல் சம்பவத்தால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சலசலப்பு போகப்போக சரியாகி விடும் என்று அவர் நம்புகிறார்.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் தற்போது எடப்பாடி பழனிசாமி வசமே உள்ளது. தடைகளை உடைத்து எறிந்து கட்சி அலுவலகத்தை மீட்டது போன்று கட்சியும் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஆட்களை நியமித்து வருவதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்.

இதன்படி அ.தி.மு.க. பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டு உள்ளார். ஜனவரி 17-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி இந்த மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி அல்லது கோவையில் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து தனது ஆதரவாளர்களை திரட்டி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக சிறப்பான முறையில் மாநாட்டை நடத்தவும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் வியூகம் வகுத்துள்ளனர்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார். இதுதொடர்பாக மாநாட்டில் மேலும் பல அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பி.எஸ்., தினகரன் இருவரையும் இணைத்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ இதற்கு சம்மதிக்காமலேயே இருந்து வருகிறார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியோ அ.தி.மு.க. இணைப்பு முயற்சியில் தீவிரம் காட்சி வருவதும் குறிப்பிடத்தக்கது’’ என்றனர்.

‘அ.தி.மு.க. எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது… ஆதரவாளர்கள் என்பக்கம் தான் இருக்கிறார்கள்’ என்பதற்காகவும், கூட்டணி கட்சிகளுக்கு ‘கெத்தை’ காட்டவும் இந்த மாநாட்டை நடத்த தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal