இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர்(!) மீது மேலும் ஒரு பாலியல் புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 37). சினிமா தயாரிப்பாளர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் திரைப்படம் எடுக்கப்போவதாகவும், அதில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான இளம்பெண்கள் தேவை என அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். மேலும் கதாநாயகி நேர்முக தேர்வு பொள்ளாச்சியில் உள்ள ஒரு லாட்ஜில் நடப்பதாக கூறப்பட்டு இருந்தது.

இதனை பார்த்த சென்னையை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசையில் சினிமா தயாரிப்பாளர் கூறிய முகவரிக்கு நேர்முக தேர்வில் கலத்து கொள்வதற்காக சென்றார். அப்போது அங்கு வைத்து பார்த்திபன் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். சிறிது நேரத்தில் மாணவி மயங்கினார். அப்போது தயாரிப்பாளர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அவர் தனது செல்போனில் மாணவியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார். மயக்கத்தில் இருந்து எழுந்த மாணவி தான் கற்பை பறிகொடுத்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தயாரிப்பாளர் பார்த்திபனிடம் கேட்டபோது, அவர் கதாநாயகியா நடிக்க வைப்பதாகவும், அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார். இதனை உண்மைஎன நம்பிய மாணவி அவருடன் தொடர்ந்து பழகி வந்தார். இவ்வாறாக ஆசை வார்த்தை கூறி தயாரிப்பாளர் பார்த்திபன் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து அவர் பார்த்திபனிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர் குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது எனவே கருவை கலைத்து விடு என கூறி உள்ளார்.

அதன் பின்னர் மாணவி கருக்கலைப்பு செய்தார். ஆனால் தயாரிப்பாளர் பார்த்திபன் கூறியபடி மாணவியை திருமணம் செய்யவும் இல்லை. அவரை கதாநாயகியாக நடிக்க வைக்கவும் இல்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டதின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் தலைமறைவாக இருந்த சினிமா தயாரிப்பாளர் பார்த்திபனை கைது செய்தனர். இதனையடுத்து அவர் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் கோவை வேடப்பட்டியை சேர்ந்த 32 வயது இளம்பெண் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் பார்த்திபன் மீது ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் பார்த்திபன் சரவணம்பட்டி பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். அங்கு பெண்களை வைத்து தவறான செயலில் ஈடுபட்டார். இது குறித்து நான் கேட்டபோது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து நான் பீளமேடு போலீசில் புகார் செய்தேன். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அடுத்த நாள் என்னை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட எனது கணவர், எனக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி புகார் செய்து விடுவதாக மிரட்டினார்.

இந்தநிலையில் எனது சகோதரரை தொடர்பு கொண்ட பார்த்திபன், தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட உனது சகோதரியின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் எனவும் மிரட்டி உள்ளார்.

தற்போது எனக்கும், பார்த்திபனுக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் தற்போது நடந்து வருகிறது. எனவே எனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் பார்த்திபன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் உள்பட 4 பேர் மீதும் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal