அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தன் மீதான வழக்குகளில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக மத்திய பாஜக அரசின் உதவியை நாடி டெல்லி சென்றிருந்த நிலையில்! இரண்டாவது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள பான் மசாலா நிறுவனம் ஒன்றில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில், 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியில், தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

வருமான வரித்துறையின் அறிக்கையைத் தொடர்ந்து, அப்போதைய அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு சோதனையும் நடத்தியது. அதன்பின்னர், சென்னை சிபிஐ கூடுதல் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த 2018ஆம் ஆண்டு முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது அந்த வழக்கில் 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வணிக வரித்துறை, காவல்துறை மற்றும் கலால்துறை அதிகாரிகளான குறிஞ்சி செல்வன், கணேசன், லட்சுமி நாராயணன், மன்னர் மன்னன் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்று, பாஜகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்களைச் சந்தித்தார். குட்கா வழக்கு நெருக்கி வரும் நிலையில், விஜயபாஸ்கர் டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய அமைச்சர்களைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் வந்தபோது விஜயபாஸ்கர் அவரைச் சந்தித்திருந்தார். இந்நிலையில் அவர் எதற்காக டெல்லி சென்றார் என்ற கேள்விகள் எழுந்தன.

விஜயபாஸ்கரின் டெல்லி விசிட் பல்வேறு யூகங்களைக் கிளப்பிய நிலையில் தான் அமைச்சர் எல்.முருகனை சந்தித்தது ஏன் என விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்தார். ‘‘ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி சார்பில்மத்திய இணை அமைச்சர் முருகனை டெல்லியில் சந்தித்தேன். நம் உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், முன்வைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து வலியுறுத்தினேன்’’ எனத் தெரிவித்தார். விஜயபாஸ்கரின் இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகரனும் உடன் இருந்தார்.

அதிமுக மாஜி விஜயபாஸ்கர், தனது டெல்லி விசிட்டின்போது பாஜகவைச் சேர்ந்த வேறொரு முக்கிய அமைச்சரையும் ‘கைகட்டிய’வாறு சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சந்திப்பின்போது, தன் மீதான குட்கா முறைகேடு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் டெல்லியில் மூவ் செய்த அதே நாளில், சிபிஐ இரண்டாவது குற்றப் பத்திரிக்கையை செய்துள்ளது.

குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக அமைச்சர் கைதானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal