நகைகளை கொள்ளையடித்து நடிகையுடன் உல்லாசமாக இருந்த திருடனைப் பற்றி வெளியாக அதிர்ச்சித் தகவல்கள் தமிழகத்தை அதிர வைத்திருக்கிறது.
சமீபகாலமாகவே, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தந்துள்ளனர். இந்த புகார்களின் அடிப்படையில், போலீசாரும் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது.. அங்குள்ள பண்ணைசங்கரய்யர் நகரில், கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த ஜூலை 4-ம் தேதி யாரோ கொள்ளையடித்து சென்றுள்ளனர். நைட் நேரத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 6 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அதேபோல, அக்டோபர் 30-ம் தேதி சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில், ருபினா பர்வீன் என்பவரின் வீட்டிலும் இதுபோலவே நகைகள் களவு போயின. இந்த கொள்ளை சம்பவத்திலும் போலீசார் தீவிர முயற்சி எடுத்தும், குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறினர். ஆனாலும், எப்படியாவது இக்கொள்ளைகளில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று தென் மண்டல ஐஜி-யான ஆஸ்ரா கர்க் மும்முரம் காட்டினார்.
நெல்லை மாவட்ட எஸ்பி-யான சரவணன், ஏடிஎஸ்பி-யான பல்வீர் சிங் ஆகியோர் கண்காணிப்பில் தனிப்படை இதற்காகவே அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீஸார், இந்த கொள்ளை சம்பவ விசாரணையில் குதித்தனர். கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகைகள் எதுவுமே கிடைக்கவில்லை. அதனால் அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை திரட்டி விசாரித்தனர். அப்போது கொள்ளை நடந்த பகுதிகளில், நைட் நேரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் ரோட்டில் நடந்து சென்றது பதிவாகி இருந்தது. கைரேகைகள் பதிவாகாமல் இருக்க, ‘க்ளவுஸ்’ பயன்படுத்தியதாக தெரிகிறது.
அந்த நபர் யார் என்பது தெரியாததால், அருகில் உள்ள மாவட்ட காவல்நிலையங்களுக்கும் அவரின் போட்டோவை அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், அந்த நபரின் பெயர் சுடலைபழம் என்பது தெரியவந்தது. 44 வயதாகிறதாம். நெல்லை மாவட்டத்தில் நடந்த பல கொள்ளை சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது. இவர் குமரி மாவட்டம், முகிலன் குடியிருப்பு, கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததால், அவரைத் தேடி போலீசார் அங்கு விரைந்தனர்.. ஆனால், அவர் வீட்டில் இல்லை. சொந்த ஊருக்கு வந்தே ஒரு வருடம் மேலாகிறதாம்.
இதையடுத்து, பல்வேறு தீவிர வேட்டைகளில் இறங்கியதையடுத்து, அம்பாசமுத்திரம் பகுதியில் சுடலைபழம் நடமாடுவதாக க்ளூ கிடைத்தது. அதன்படியே அங்கு சென்ற போலீசார், சுடலைபழத்தை கைது செய்துவிட்டனர். கைதாகும்போது, ஒரு பையை கையில் வைத்திருந்தார். அந்த பையில், 1.48 கிலோ தங்க நகைகளும், அரை கிலோ வெள்ளிப் பொருட்களும், 50,000 ரூபாய் ரொக்கமும் இருந்திருக்கின்றன.. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர் எங்கே கொள்ளையடித்தாலும், கைரேகை பதிவாகாமல் இருக்க கிளவுஸ் போட்டுக் கொள்வாராம்.
இத்தனை காலமும் திருடிய பணத்தை, நடிகைகளிடம் தான் இழந்ததாக வாக்குமூலத்தில் சொல்கிறார். சுடலைபழம் மீது தமிழ்நாடு முழுக்க மொத்தம் 50-க்கும் அதிகமான கேஸ்கள் இருக்கின்றன. அப்படி இருந்தாலும் அதே ஊர்களுக்கு சென்று துணிந்து கைவரிசையை காட்டி வந்துள்ளார்.
நடுத்தர குடும்பங்களில் வீடுகளில் புகுந்து நகைகளை கொள்ளையடித்து, நடிகைகளிடம் சுடலை பழம் உல்லாசமாக இருந்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.