கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ‘தான்தோன்றி’ தனமாக பேசக்கூடாது. செய்தி தொடர்பாளர்களை தவிர யாரும் ‘நேர்காணல்’ கொடுக்கக்கூடாது என கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அண்ணாமலை.

பாஜகவின் கூட்டணி கட்சியான் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் யூடியூப் சேனலில் விமர்சித்து வருவதாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்தது. இதனையடுத்து கட்சி நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நமது கட்சியின் கருத்துக்களை, சித்தாந்தங்களைப் பதிவிடுவதற்கும், எதிர்க் கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் சமூக வலைத்தளங்கள் பெரிதளவு பயன்படுத்தப்படுகிறது. சமீபகாலமாகத் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களுக்கு இணையாக யூடியூப் செயலியில் எண்ணற்ற சேனல்கள் இயங்கி வருகிறது.

நமது கருத்துக்களை முன்னெடுத்து வைப்பதற்கு யூடியூப் சேனல்களும் பெரிதளவில் உதவுகிறது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.ஆனால் இவ்வாறு யூடியூப் சேனல்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்களது சொந்த கருத்துக்களை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பற்றியும் யூடியூப் சேனல்களில் கட்சியில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல.

அந்த காணொளியை காணும் மக்களுக்கு இது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து மற்றும் நமது கட்சியின் எண்ண ஓட்டம் இது தான் போன்ற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்து சென்றுவிடுகிறது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால் அதை நமது மாநில ஊடக பிரிவின் தலைவர் திரு ரங்கநாயக்கலு அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

இனி வரும் காலங்களில், கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நீங்கள் நேர்காணல்கள் வழங்க வேண்டும் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக நமது கட்சி சொந்தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணை ஆபாச பேசி கொலை மிரட்டல் விடுத்த சூர்யா சிவாவை கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

சூர்யா சிவா பற்றி கடுமையாக வலைதளங்களில் விமர்சித்த, தமிழ்நாடு பாஜக கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகளை நடுநிலையாளர்கள் வரவேற்றுள்ளனர். ‘மேலிடத்தை’ வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க.வினருக்கும் கொஞ்சம் கலக்கத்தில்தான் இருக்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal