‘அ.தி.மு.க. தலைமையில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமையும்… அதில் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. இடம் பெற ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை’ என அடித்து கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிச்சாமியைப் பொறுத்தளவில் அரசியலில் எந்தளவிற்கு ராஜ தந்திரத்தையும், சாதுர்யத்தையும் பயன்படுத்த வேண்டுமோ அதை பயன்படுத்துவார். அதே சமயம், தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து ஓ.பி.எஸ்.ஸைப் போல் ஒருபோதும் அடிக்கடி மாறமாட்டார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி வைக்கும் என இருகட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்து வந்த நிலையில், ‘அதற்கு வாய்ப்பில்லை’ என்று ஒரே போடாக போட்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடியின் இந்த அதிரடிக்குப் பிறகு, கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் இருந்த டி.டி.வி. மாற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டாராம்!
டி.டி.வி.தினகரனின் திடீர் மனம் மாற்றம் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் உள்ள சிலரிடம் பேசினோம்.
‘‘அ.தி.மு.க.வில் 90 சதவீதத்திற்கும் மேல் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள். இதனை டி.டி.வி.தினகரனும் அறியாமல் இல்லை. ஆரம்பத்தில் அ.ம.மு.க.வில் இருந்தவர்கள் தி.மு.க. மற்றும் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். தற்போது பதவிக்காக மட்டும்தான் டி.டி.வி. அணியில் சில நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் எடப்பாடி அணியுடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெற்று, மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறது என கருதினர்.
ஆனால், எங்களது எண்ணவோட்டத்தில் மண்ணை வாரிப்போட்டுவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இனி, நாங்கள் ஓ.பி.எஸ்.ஸுடன் கூட்டணி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக முக்குலத்து சமுயாத்தினரே இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
தவிர, முக்குலத்து சமுதாயத்தில் ஒரு சில நபர்கள் மட்டும்தான் ஓ-.பி.எஸ். பற்றி கோஷம் எழுப்பி வருகின்றனர். அதே முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிக நிர்வாகிகள் எடப்பாடி பக்கம்தான் நிற்கிறார்கள்’’ என்றவர், அடுத்துச் சொன்னதுதான் அதிர்ச்சி ரகம்!
‘‘அதாவது, எடப்பாடி அணியைத் தவிர ஓ.பி.எஸ். பக்கம் டி.டி.வி. சென்றால், நாங்கள் அனைவரும் எடப்பாடி பக்கம் செல்ல நேரிடும். ஏற்கனவே, தன்னை நம்பி வந்தவர்களை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவில்லை டி.டி.வி.யால்! செந்தில்பாலாஜி, பழனியப்பன், தங்க தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய நிர்வாகிகள் தி.மு.க. பக்கம் சென்றுவிட்டனர்.
இதற்கு காரணம், ‘தான் ஒரு முதல்வர்’ என்ற கனவில் டி.டி.வி.தினகரன் மிதந்துகொண்டிருப்பதுதான். எனவே, டி.டி.வி. தினகரன் மனம் மாறுவது என்ன நாங்கள் சில முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் எடப்பாடியாரை சந்தித்து ஒரு நல்ல முடிவை எடுப்போடும்’’ என்றார்!
இதற்கிடையே, அ.ம.மு.க.வின் பொருளாளராக இருக்கும், முன்னாள் அரசு கொறடா மனோகரனுக்கு முக்கியப் புள்ளி வாயிலாக எடப்பாடி பழனிசாமி தூதுவிட்டிருக்கிறாராம். காரணம், திருச்சியில் இருப்பவர்கள் தனித்தனி கோஷ்டியுடன் வலம் வருவது எடப்பாடியாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, டி.டி.வி.க்கு பக்கபலமாக இருக்கும் மலைக்கோட்டை மன்னனும் விரைவில் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிடுவார் என்கிறார்கள்!