தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. தலைமைக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் கவர்னரை திரும்பப் பெறவேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை, ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என்று தி.மு.க. குற்றச்சாட்டியது. இந்த நிலையில்தான் இதற்கான விளக்கத்தை கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘கவர்னர் பதவி ரப்பர் ஸ்டாம்ப் போன்ற பதவி இல்லை’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ஆரிப் முகமது கான் உள்ளார். அவருக்கும் மாநில அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த கருத்து வேறுபாடு மூண்டது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் நேற்று லோக் ஆயுக்தா தின விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- ‘‘ லோக் ஆயுக்தா சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். இச்சட்டத்தை யாரும் பலவீனப்படுத்த கூடாது. எந்த வகையிலும் அதற்கு முயற்சிக்க கூடாது.

இதனை மீறி லோக் ஆயுக்தா சட்டத்தை யாராவது பலவீனப்படுத்த முயன்றால் அதனை தடுக்க அம்மாநில கவர்னர்கள் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை. மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்து போடாமல் இருக்க தகுந்த காரணங்கள் இருக்கும். இதனை சுப்ரீம் கோர்ட்டும் தெளிவு படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் கேரள சட்ட மந்திரி ராஜீவ் கலந்து கொண்டார். அவர் பேசும் போது, லோக் ஆயுக்தா அமைப்பை வலுப்படுத்த வேண்டும், என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal