ஆட்டோ டிரைவர் மனைவியுடன் மாயமான 45 வயது மதமோதகர், பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்ச தோப்பு காலனி பகுதியை சேர்ந்த 47 வயதான ஆட்டோ டிரைவர், தனது 45 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் வெளிநாட்டில் உள்ளார்.
ஆட்டோ டிரைவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதய கோளாறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ததேயுபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 45 வயது உடைய ஒரு நபர் தன்னை போதகர் என கூறிக்கொண்டு ஆட்டோ டிரைவருக்கு அறிமுகமாகி உள்ளார். அதன்பின்னர் பிரார்த்தனை செய்வதற்காக ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காலையில் சவாரி சென்று விட்டு ஆட்டோ டிரைவர் வீடு திரும்பியபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவரது மனைவியையும் காணவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் மனைவி பற்றி தகவல் கிடைக்காததால் ஆட்டோ டிரைவர் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் வழக்கமாக பிரார்த்தனைக்கு வரும் போதகரும் வராமல் இருந்ததால் ததேயுபுரம் சென்று அவரது வீட்டில் ஆட்டோ டிரைவர் விசாரித்துள்ளார்.
அப்போது போதகரும் 28-ந் தேதி காலையில் இருந்து மாயமான தகவல் கிடைத்துள்ளது. எனவே இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, போதகருடன் தனது மனைவி சென்று இருக்கலாம் என ஆட்டோ டிரைவர் கருதினார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவரின் மனைவி, திருமணமான தனது மகளுக்கு போன் செய்து, தான் போதகருடன் தேங்காப்பட்டணம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்து ஆட்டோ டிரைவர் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் சி.எஸ்.ஆர். பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை போதகருடன், ஆட்டோ டிரைவர் மனைவி கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். முதிர்ந்த கள்ளக்காதல் ஜோடியிடம் போலீசார் விசாரித்தபோது, போலீஸ் தங்களை தேடியதால் தஞ்சம் அடைந்ததாக போதகர் தெரிவித்தார். ஆட்டோ டிரைவரின் மனைவி, போலீசில் கூறுகையில், கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அதனால், தான் கணவர் வீட்டிற்கு செல்லவில்லை என்று தெரிவித்தார். பின்னர் அதை இருவரும் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு சென்றனர்.
முதிர்ந்த கள்ளக்காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் அறிந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் போலீஸ் நிலையத்தில் வந்து குவிந்தனர்.