தமிழ்நாட்டில் சின்னாளப்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள காந்திகிராம் தொடங்கப்பட்டு 75 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

 பிரதமர் நரேந்திர மோடி நவ. 11 ஆம் தேதி பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுகல் மாவட்டம் அம்பாத்துரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டில் இறங்கி, அங்கிருந்து சின்னாளப்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள காந்தி கிராமத்திற்கு கார் மூலம் மாலை 4 மணிக்கு வந்து, அங்கு நடைபெற உள்ள காந்திகிராம் தொடங்கப்பட்டு 75 வது ஆண்டு நிறைவு விழாவிலும், அதன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார்.

முன்னதாக பெங்களூரில் நடைபெற உள்ள மைசூரு, பெங்களூரு, சென்னை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தின் முகப்பில் 108 அடியில் அமைக்கப்பட்டுள்ள கெம்பேகௌடர் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொண்டு அவர் உரை நிகழ்த்துகிறார்.

 பிரதமர் நரேந்திர மோடி வருகையொட்டி, காந்திகிராமம் பல்கலைக்கழகம், ஹெலிபேடு ஆகிய இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . பாதுகாப்பு பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக டிஐஜி ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

 இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் என்.ஆர்.ரவி, முதல்வர் மு..ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 50 பேருக்கு முனைவர் பட்டமும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும், தங்கப் பதக்கக்களையும் வழங்கி, கவுரவிக்கிறார்.

 

 

By Divya