சென்னையில் பிரியாணி கேட்ட மனைவியை கணவன் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கணவன் மீது போலீசார் கொலை வழக்கை பதிவு செய்திருக்கின்றனர்!

சென்னை அயனாவரம் தாகூர் நகரை சேர்ந்தவர் கருணாகரன். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். மேலும் அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் கருணாகரன் தன் மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கருணாகரன் பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்ட பத்மாவதி தனக்கும் வேண்டும் என கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து கருணாகரன் மண்ணெண்ணையை பத்மாவதி மீது ஊற்றி கொளுத்தினார். இதை அடுத்து பத்மாவதி அலறியடித்துக் கொண்டே கருணாகரனை கட்டிப்பிடித்துள்ளார். இதனால், கருணாகரனுக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களின் அலறல் சத்தம் கேட்ட வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பத்மாவதி உயிரிழந்தார்.

50 சதவீத தீக்காயங்களுடன் கருணாகரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இறப்பதற்கு முன்னதாக மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பேசிய பத்மாவதி, கணவர் தனியாக பிரியாணி சாப்பிடுவதை கண்டு தனக்கும் பிரியாணி வாங்கி தர கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டு, தன்னை கொளுத்தியதாக தெரிவித்திருந்தார். இதை அடுத்து கருணாகரன் மீது கொலை வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal