பா.ஜ.க.வில் உள்ள நடிகைகள் குஷ்பு, காயத்திரி ரகுராம், நமீதா, கௌதமி ஆகியேரை தி.மு.க.வின் பேச்சாளர் சைதை சாதிக் மிகவும் தரக்குறைவாக பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கனிமொழி எம்.பி., பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதனை தமிழக பி.ஜே.பி. வரவேற்றாலும், சம்பந்தப்பட்ட சைதை சாதிக் மீது தி.மு.க. தலைமையும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில்தான் நடிகை குஷ்பு, டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் சென்று சைதை சாதிக் மீது புகார் அளித்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘தமிழக பா.ஜ.க. பெண் தலைவர்கள் பற்றி சைதை சாதிக் ஆபாசமாக பேசியது குறித்து வீடியோ ஆதாரத்துடன் அண்ணாமலை புகார் அளித்திருக்கிறார். நடிகை குஷ்புவும் நேரில் வந்து புகார் மனு அளித்துள்ளார்.

இது போன்ற பேச்சுகளுக்கு, சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 509&ன் படி இது குற்றமாகும்.

எனவே, சைதை சாதிக் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal