தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:- ‘‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு மாவட்டத்தில் அதிகன மழையும், 7 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது.

சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து உள்ளது. இந்த நிலையில் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும், தொடர்ந்து நாளை (4-ந் தேதி) முதல் 7-ந் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வருகிற 6, 7-ந் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரங்களில் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ., தஞ்சாவூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal