கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைசராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தார் செந்தில் பாலாஜி என்பது வழக்கு. செந்தில் பாலாஜியுடன் அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தம் மீதான மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு தாக்கல் செய்தார். இன்னொரு பக்கம், பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் மேலும் சிலர் புதியதாகவும் மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது.
செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முன்னர் ரத்து செய்திருந்தது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த ரத்து உத்தரவுக்கு தடை விதித்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ‘‘அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது. ஆகையால் மூன்று வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘‘அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரம் மிக்க நபராக இருக்கிறார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உரிய அறிவுறுத்தல்களை ஏற்கனவே வழங்கி இருக்கிறது. இதனடிப்படையில் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என்றார். செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் கொடுத்த மனுதாரர்களும் அவர் மீதான வழக்குகளை ரத்து செய்தால் அவரிடம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்காது. ஆகையால் வழக்குகளை ரத்து செய்யக் கூடாது’’ என வாதிட்டனர். தமிழக போலீசார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திலக், ‘‘இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவஞானம், இந்த வழக்கில் அக்டோபர் 31 திங்கள்கிழமையன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறியிருந்தார். இதனையடுத்து அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான புகார்களை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் நீதிபதி சிவஞானம்.
தற்போது தி.மு.க.வில் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை எனும் முக்கியத் துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார் செந்திபல் பாலாஜி என்பது குறிப்பிடத் தக்கது!