கடந்த எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு தேவர் ஜெயந்தி விழாவில் ‘அரசியல்’ தலைவர்கள் சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தனர். இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்கு செல்லாத நிலையில், அவரது சார்பில் அங்குள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவுகளை வழங்கியிருக்கிறார் அய்யாத்துரை பாண்டியன்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அய்யாத்துரை பாண்டியன் ‘தமிழகத்தில் அடுத்து அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும்’ என அடித்துக் கூறினார்.

பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளும்… அவரது பதிலும் இதோ..?

1.திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக உழைத்து விட்டு திமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிந்ததும் ஏன் திமுகவை விட்டு விலகினீர்கள்?
நான் என் சுயநலம் கருதிஅரசியலுக்கு வரவில்லை. மாறாக ஏழை, எளிய, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு வந்தேன். உண்மைக்கும், நேர்மைக்கும், உழைப்புக்கும், மரியாதை இல்லை. நினைத்ததை நிறைவேற்ற வேறு வழி இல்லை என்பதை அறிந்து விலகினேன்.

  1. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விலோ, பி.ஜே.பி.யிலோ அல்லது ஏன் சுயேட்சையாகவோ போட்டியிடாமல் அமமுக-வில் இணைந்து ஏன் போட்டியிட்டீர்கள்?
    அமமுகவிற்கு அடித்தளம் உள்ளது, கொஞ்சம் ஓட்டு வாங்கி உள்ளது, அத்தோடு எனக்கென்று ஒரு வாக்கு வங்கி உள்ளது, அத்துடன் அனுதாப ஓட்டுகளும் சேர்ந்து வெற்றியடைவேன் என நினைத்தேன். ஆனால், நான் நினைத்தது போல் அமமுகவிற்கு அடித்தளமும் இல்லை, ஓட்டு வங்கியும் இல்லை. மாறாக அவர்களால்தான் நான் தோல்வியடைந்தேன்.

3.அமமுகவிலிருந்து ஏன் வெளியேறினீர்கள்?
அந்தக் கட்சியில் இணைந்த நாள் முதல் ரத்தம் சிந்தி உழைத்த பணத்தை செலவழித்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டேன். அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எல்லை மீறி சென்று அவமானப்படுத்தினார்கள்… நானாக அந்த கட்சியில் இருந்து விலகவில்லை மாறாக நீக்கினார்கள்.
ஒரு சினிமா படத்தில் வருவது போல இழவு வீடாக இருந்தால் நான் தான் பிணம்… கல்யாண வீடாக இருந்தால் நான் தான் மாப்பிள்ளை என்று திரு.நெப்போலியன் அவர்கள் கூறுவார்கள். அதே போல் அந்த கட்சியிலும் ஒருவர் இருக்கிறார். கட்சி வளர்ந்து விட கூடாது என்று கண்ணும் கருத்துமாக செயல்பட்டு கட்சியை அழித்துவிட்டார். அது போல் அந்த கட்சியின் தலைவரும் அவர் மகுடிக்கு அடங்கி போய்விடுவார்,

  1. நீங்கள் ஏன் ஒரு தனிக்கட்சி தொடங்கி இருக்கக் கூடாது?
    நான் அரசியலுக்கு பிழைப்பு நடத்த வரவில்லை. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும் படித்த கிராமப்புற ஏழை, எளிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும்தான். என் சுய இலாபத்திற்காக இளைஞர்களை பலிக்கடா ஆக்க விரும்பவில்லை.
  2. அ.இ.அ.தி.மு.கவில் எடப்பாடி திரு.கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இணைய காரணம் என்ன?

05&-10-&2022 விஜயதசமி அன்று என்னை எடப்பாடி திரு.கே.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அ.இ.அ.தி.மு.கவில் இணைத்துக் கொள்வதற்கு முன்பு ஆறு மாத கால இடைவெளியில் மூன்று முறை தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்தேன். அந்த மூன்று முறையும் முன்னுக்கு பின் முரணாக பேசாமல் ஒரே மாதிரியாக பேசினார். புரட்சித்தலைவர் அவர்களின் கருணை உள்ளமும், புரட்சித்தலைவி ஆளுமையையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதே போல் இருவரும் கலந்த கலவையாக எடப்பாடி திரு.கே.பழனிச்சாமியை பார்த்து வியப்புற்றேன். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இரவு தூங்கி எழுந்திருப்போமா மாட்டோமா என்ற தெரியாத வாழ்க்கையில் இருக்கும் வரை ஏழைகளுக்காக உழைக்க வேண்டும் என்றார். இந்த வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது. மேலும் மிக எளிமையாகவும் எல்லோரிடமும் அன்பாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி தற்காலத்தில் ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் எடப்பாடி திரு.கே.பழனிச்சாமி அவர்கள் ஒருவரே.

  1. கடந்த ஒன்றரை ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பற்றி..?
    சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள். இன்று வரை ரத்து செய்யப்படவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. மின் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவை வழங்கிய அரசு ஊழியர்கள் இப்போது ஆட்சி மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal