‘பிரிந்த தலைவர்கள் இணையவேண்டும்…’ என மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உருக்கமான வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக பூங்குன்றன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு….
‘‘தமிழ்நாட்டின் ஒரு மூலையில் விவசாய குடும்பத்தில் பிறந்து, தமிழ்நாட்டை ஆண்ட இரும்பு பெண்மணியிடம் பயணிக்கும் வாய்ப்பை பெற்றவன் நான். இதுவே இறைவன் எனக்குக் கொடுத்த பெருமை. குழந்தை பருவம் தொடங்கி இளைஞர் பருவம் வரை என்னுடைய தந்தையின் பார்வையில் உலகைப் பார்த்தேன். அவர் ஆசைப்படி நடந்து கொண்டேன். படிப்பை முடித்தவுடன் என் விருப்பத்தின் படி வாழ ஆசைப்பட்ட நான், தந்தையின் பார்வையில் இருந்து மாறி சிங்கப் பெண்மணியின் பார்வைக்குள் அகப்பட்டுக் கொண்டேன்.
அம்மா அவர்களுக்கு பிடித்தவர்கள் எங்களுக்கு பிடித்தவர்கள். அம்மா அவர்களுக்கு பிடிக்காதவர்கள் எங்களுக்கும் பிடிக்காதவர்கள். அம்மா அவர்கள் இடும் கட்டளைகளை மட்டுமே நிறைவேற்றப் பயிற்றுவிக்கப்பட்டோம். சுருங்கச் சொன்னால் ‘சொன்னதை செய்யும் கிளிப் பிள்ளையாகவே’ மாறிவிட்டேன். அதைத்தான் புரட்சித்தலைவியும் ரசித்தார்கள். விரும்பினார்கள். உலகை ரசிக்க நினைத்த என்னுடைய பார்வை நாளடைவில் புரட்சித்தலைவியினுடைய பார்வையாகவே மாறிப்போனது.
ஜாதிக்குள் அகப்படாத பத்தரை மாற்றுத் தங்கம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமைகளை எனக்குச் சொல்லிக் கொடுத்ததே புரட்சித்தலைவி அம்மா தான். நான் பணிக்கு சேர்ந்த காலத்தில் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் என்னிடம் பேசிய புரட்சித்தலைவி அம்மா தேவர் ஜெயந்தி என்றைக்கு என்று கேட்டார். அதுவரை அதைப்பற்றி நான் தெரிந்து கொண்டதில்லை. அதில் ஆர்வமும் இல்லை. அதனால் அம்மா அவர்களிடம் தெரியாது என்று சொன்னேன். அக்டோபர் 30. உனக்கே தெரியவில்லை என்றால் எப்படி? எனக்குத் தெரியும் உனக்குத் தெரிகிறதா? என்பதற்காகவே இதைக் கேட்டேன். அந்த சமுதாயத்தில் பிறந்த நீ இதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா? இனி எப்போது கேட்டாலும் சரியாகச் சொல்ல வேண்டும் என்று எனக்கு பாடம் எடுத்தார்.
அன்றிலிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் மீது எனக்கு ஒரு பாசம் உண்டாகியது. முருக பக்தர் என்பது என்னை மேலும் அவரிடம் நெருங்கச் செய்தது. அம்மா அவர்களும் தெய்வத்திருமகனார் முத்துராமலிங்க தேவர் அவர்களை சித்த புருஷராகவே வணங்கினார். பசும்பொன் தந்த அந்த மகா சித்தனுக்கு தங்க கவசத்தை அணிவித்து பெருமை சேர்த்தார். ‘தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்’ என்று முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வழியில் ஒரு பெண் சிங்கமாகவே வாழ்ந்தார். மகானைப் போல எல்லா சமூகத்தையும் ஒன்றாகவே பாவித்தார். சமமாகவே நடத்தினார்.
ஆரம்ப காலத்தில் என்னுடைய தந்தையின் பார்வையில் உலகை பார்த்த நான் பிறகு புரட்சித்தலைவியின் பார்வையில் உலகை பார்க்கத் தொடங்கினேன். ஆனால், இன்று இரண்டு கண்களும் பறிபோய் திக்குத் தெரியாமல் தடுமாறி நிற்கின்றேன். யாரிடம் நான் செல்வது? என்ற கேள்விக்கு விடை தெரியாமல் கலங்கி நிற்கின்றேன். எல்லோரும் புரட்சித்தலைவரின், புரட்சித்தலைவியின் பிள்ளைகள். இவர்களில் யாரோடு நான் கூட்டு சேர்வது? யாரை எதிர்ப்பது? என்று தெரியாமல் இதய தெய்வங்களை வழிகாட்ட வேண்டிக் காத்திருக்கிறேன்.
அம்மாவின் பார்வையில் பார்த்த எனக்கு பிரித்து பார்க்கும் மனம் வரவில்லை. மகான் வழியிலும், என் அம்மா வழியிலும் நானும் ஜாதிய வளையத்துக்குள் விழவில்லை. இதய தெய்வத்தின் பிள்ளைகள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே என் வேண்டுதல். கோடி தொண்டர்களின் வேண்டுதலும் அதுவே! நலம் விரும்பும் மக்களின் வேண்டுதலும் அதுவே!
நான் வணங்கும் பசும்பொன் சித்தரே! உங்களுக்கு தங்க கவசம் கொடுத்து பெருமை சேர்த்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கம் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக வேண்டி உங்களை மன்றாடி நிற்கின்றேன். விரைவில் பிரிந்த தலைவர்கள் இணைந்து ஆரத்தழுவி மகிழும் காட்சியை காண நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். அதனை நிறைவேற்றித் தாருங்கள்’’ என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.