தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். சமீப காலமாகவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த இவர், தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘யசோதா திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு அபாரமாக இருந்தது. உங்கள் அனைவருடன் நான் கொண்டுள்ள இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, எனக்கு மயோசிடிஸ் எனப்படும் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நோயிலிருந்து குணமடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட குணமடைய கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்ள நான் போராடி வருகிறேன். விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் நான் நல்ல மற்றும் மோசமான நாட்களைப் பெற்றிருக்கிறேன்.
அடுத்த ஒரு நாளை என்னால் சமாளிக்க முடியாது என்று உணர்ந்தாலும், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. நான் குணமடையும் அந்த ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.